
செய்ய வேண்டும்
வாலிபந் தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற
வழியிலே நிற்க வேண்டும்;
வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி
வளரறஞ் செய்ய வேண்டும்;
சீலம்உடை யோர்களைச் சேரவேண் டும்;பிரிதல்
செய்யா திருக்க வேண்டும்
செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண் டும்;கொண்டு
தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பலதருமம் நாட்டவேண் டும்;நாட்டி
நன்றாய் நடத்த வேண்டும்;
நம்பன் இணை யடிபூசை பண்ணவேண் டும்;பண்ணி
னாலும்மிகு பத்தி வேண்டும்
ஆலமமர் கண்டனே! பூதியணி முண்டனே!
அனக! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
நஞ்சு பொருந்திய
கழுத்தையுடையவனே! திருநீறு பூசிய நெற்றியையுடையவனே!, குற்றம் இல்லாதவனே!, எமது தேவனே!,
இளமையிலேயே கலைகளைக்
கற்றல் வேண்டும், கற்றவாறே
நன்னெறியிலே நடத்தல் வேண்டும், (உலகை) வளைந்திருக்குங் கடலிலே (கலம் ஊர்ந்து) அலைந்து பொருளைச் சேர்த்தல் வேண்டும். சேர்த்துப் பெருகும் அறங்களை இயற்றல் வேண்டும்,
ஒழுக்கம் உடையவர்களிடம் நட்புக் கொள்ளவேண்டும், (அவர்களை) நீங்காது இருத்தல் வேண்டும். பல செந்தமிழ்ப் பாக்களைப் (புகழ் மாலையாக) ஏற்றல் வேண்டும், ஏற்றுப் (புலவர்களுக்கு) நன்கொடை அளித்தல் வேண்டும். உலகிலே பல அறநிலையங்களை நிறுவுதல்
வேண்டும். நிறுவியதோடு நில்லாமல்,
அவற்றை ஒழுங்காக நடத்தல் வேண்டும். சிவபெருமானாகிய (உன்) இரு திருவடிகளினும் வழிபாடு செய்தல் வேண்டும், வழிபாடு செய்தாலும் பேரன்பு வேண்டும்.
இங்கே கூறியவாறு வயதிற்கு தக்க வாழ வேண்டும்.





