spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: கடி மாமலர்க்குள்!

திருப்புகழ் கதைகள்: கடி மாமலர்க்குள்!

- Advertisement -
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 285
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கடி மாமலர்க்குள் – சுவாமி மலை

கடப்ப மலர் 2

            கடப்ப மலரைப் பற்றிச் சொல்லும் மற்றொரு கந்தர் அலங்காரப் (72ஆம்) பாடல்

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

செந்நிறமுடையவனை, கந்தனை, திருச்செங்கோட்டு மலையை உடையவனை, சிவந்த சுடர் வேல் உடைய மன்னனை, செந்தமிழ் நூல் பல செய்தானை, புகழ் விளங்கும் வள்ளியின் மணவாளனை, கந்தனை, கடம்பமாலை அணிந்தவனை, கரிய மயிலை வாகனமாக உடையவனை, சாகும் வரையில் மறவாதவர்களுக்கு ஒரு தாழ்வும் இல்லையே.

            கொற்றவை சிறுவனாம் குமரன் மட்டுமே கடம்பன் இல்லை. கொற்றவை அம்மையும் கடம்பாடவியில் (கடம்பங்காட்டில்) விரும்பி உறைபவள்; கடம்பம்பூ மாலையை விரும்பி அணிபவள். அபிராமி அந்தாதியில் கடம்பம் இடம்பெறும் ஒரு பாடலை இங்கே காணலாம்.

ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்

காத்தும் அழித்தும் திரிபவராம்;- கமழ்பூங்கடம்பு

சாத்தும் குழல் அணங்கே!- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்

நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு; நகையுடைத்தே.

(அபிராமி அந்தாதி பாடல் எண் 26)

அந்த அபிராமியை வணங்குபவர்கள், எப்படிப்பட்டவர்கள்? ஒருவர், இந்த உலகைப் படைக்கிறார். ஒருவர், இந்த உலகு முழுக்க வாழக் காக்கும் தொழில் புரிகிறார். இன்னொரொவர், அனைத்தையும் அழிக்கும் சம்ஹார மூர்த்தியாக விளங்குகிறார். அந்த முத்தொழில் புரிவோரையும் இந்த உலகு முழுக்கவே ஏத்திப் பாராட்டுகிறது. ஆயினும், இந்த முதல் மூவரும்கூட, அபிராமியைத் தெய்வமெனப் போற்றுகிறார்கள். அப்படிப்பட்ட அபிராமி பிராட்டியின் பெருமையை, அந்த கடம்ப மாலை சாற்றி வீற்றிருக்கும் அந்த அம்மையின் பெருமையை, சொல்லி முடியுமா?

            முத்தேவர்கள் மட்டுமன்றி, மற்றெல்லாரும் வந்து, வணங்கி, வணங்கி, அந்த அபிராமியின் பாத கமலங்களும் கூட மணம் வீசுகின்றன. வேத மாதா முதல், முத்தேவர்கள் வரை அனைவரும் அந்த அணங்கின் பாத கமலங்களில் விழுந்து வணங்குவதனால், அவர்கள் தலையில் சூடிய மலர்கள், அம்பிகையின் பாத கமலங்களில் விழுகின்றன. அந்த பாத கமலங்களும், அந்த அந்த மலர்களின் வாசத்துடன் திகழ்கின்றன. இப்படிப்பட்ட பாத கமலங்கள், என்னுடைய இனிமை இல்லாத பிதற்றல் மொழிகளையும் கூட ஏற்று விளங்குவது வியப்பான ஒன்றுதானே! இப்படிப்பட்ட சௌலப்யத்துடன் விளங்குகிறாளே இந்த அபிராமி பிராட்டி என்று வியக்கிறார் பட்டர்.

            மதுரையை மட்டுமன்றி, பழநி மலையையும் `கடம்ப வனம்’ என்று சொல்வதுண்டு. எழில்மிகு பழநி மலையில் வருடத்துக்குப் பதினைந்து நாள்கள் மட்டுமே கடம்ப மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்தக் கடம்ப மலரின் நறுமணம் பல்வேறு மருத்துவக் குணங்கள் உடையது எனவும், இந்த மலர்களைத் தழுவி வீசும் காற்றினை `சஞ்சீவி காற்று’ என்றும் சொல்கின்றனர் பழநி வாழ் மக்கள்.

            ஞானப்பழம் கொண்டு ஈசன் நடத்திய திருவிளையாடலால் கோபம் கொண்டு கயிலை மலையை விட்டு தெற்கு நோக்கி வந்துவிட்டார் பாலமுருகன். அப்போது, அகத்தியர் கொடுத்த சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளைக் காவடியாக தன் தோள்களில் எடுத்து வந்த இடும்பன், சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணி பழநியில் மலைக் காவடிகளை இறக்கி வைத்தான். கோபத்தில் வந்த பாலமுருகன், இடும்பன் இறக்கிவைத்த இரு மலைகளுள் கடம்ப மரங்கள் மிகுந்து, பூத்துக் குலுங்கும் அழகிய சக்திகிரியையே தன் இருப்பிடமாகக் கொண்டான்.

            முருகனுக்கு மட்டுமன்று திருமாலுக்கும் பூஜிக்க உகந்த மலர் கடம்ப மலர். கோடைக்காலத்தில் மட்டுமே மலரக்கூடியது. இந்தக் கடம்ப மரத்தின் மலர்களையும் இலைகளையும் மாலையாகத் தொடுத்து முருகனுக்குச் சாத்துவது விசேஷமானது.

            மேலும் கடம்ப மரத்துக்கும் முருகனுக்குமான தொடர்பை சங்கப் பாடல்கள் பலவற்றிலும் காணலாம். `கடம்பமர் நெடுவேள்‘ என்று பெரும்பாணாற்றுப்படையும், `கடம்பின் சீர்மிகு நெடுவேள்‘ என்று மதுரைக் காஞ்சியும் சுட்டுகின்றன. கடம்ப மலர்களால் கட்டப்பட்ட மாலைகளை விழாக்களின்போது முருகனுக்கு அணிவிக்கப்படும் செய்தி அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில் தெரிவிக்கப்படுகிறது.

            பழநியில், சித்திரை மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர நாள்களில் கிரிவலம் வருவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. காரணம், அந்த நாள்களில்தான் கடம்ப மரங்கள் பூத்துக் குலுங்கும். கடம்ப மலர்களின் வாசம் இந்தக் காலகட்டத்தில் காற்றில் கலந்து வீசும். கிரிவலம் செல்பவர்கள் அதை நன்கு அனுபவிக்கமுடியும். இந்த நாள்களில், பழநி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும், கிரிவலம் வரும் பக்தர்களும் கடம்ப மலர் அணிந்து செல்வதையும் காணமுடியும்.

            இந்தக் கடம்ப மலர் காப்பி செடி குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் இது மரவகை. இதன் அனைத்துப் பாகங்களிலும் மருத்துவக் குணம் உண்டு. அதிலும் பூக்களின் நறுமணம் நுரையீரல் சார்ந்த நோய்களுக்குச் சிறந்த மருந்தாகிறது. மன அமைதியையும் ஏற்படுத்தக்கூடியது. தலையில் சூடிக் கொள்ளும்போது உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். கடம்ப மரத்தின் பட்டைகளும் இலைகளும் வயிறு தொடர்பான நோய்களுக்கு மருந்தாக அமையும். இதன் விதையும் வேரும்கூட இயற்கை மருத்துவத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe