thiruppugazh stories - 2026

திருப்புகழ் கதைகள்: நக்கீரரின் ஆற்றுப்படை!

ஆன்மிகக் கட்டுரைகள் Featured லைஃப் ஸ்டைல்
thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் ; பகுதி – 288
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கடி மாமலர்க்குள் – சுவாமி மலைநக்கீரர் 2

            நக்கீரனாரின் காலம் பொது சகாப்தம் இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி எனக் கருதப்படுகிறது. ஆலத்தூர்க் கிழார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், இடைக்குன்றூர்க் கிழார், ஔவையார், கல்லாடனார், கூடலூர்க்கிழார், மதுரை மருதனிளநாகனார், மாங்குடிகிழார் ஆகிய புலவர்கள் இவரது காலத்தில் வாழ்ந்தவர்கள்.

            தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், உக்கிரப்பெருவழுதி, இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, சேரமான் வெண்கோ, குட்டுவன் சேரல் ஆகிய அரசர்களும் நக்கீரர் காலத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

            நக்கீரனார் பாடியருளிய திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களில் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. இது சிறந்த ஒரு சமய நூலாகவும் பாராயண நூலாகவும் விளங்குகின்ற அதே வேளையில் ஈடிணையற்ற இலக்கிய நூலாகவும் மிளிர்கின்றது. பத்துப் பாட்டு நூல்களில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன. அவையாவன:  திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை. இந்நூல் திருமுறைகளிலே பதினோராம் திருமுறையின் பகுதியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள பெருமையும் கொண்ட அற்புதத் திருநூல் ஆகும்.

            ஆற்றுப்படை என்பது வழிப்படுத்தல் என்னும் பொருளுடையது. கூத்தரும், பாணரும், அவர்கள் தாம் ஒரு வள்ளலிடம் சென்று, பெருஞ்செல்வத்தைப் பெற்று, மீண்டு வரும் வழியில் எதிர்படும் இரவலரிடம் மறைக்காமல் தாம் பெற்ற செல்வத்தைக் கூறி, அவ்வள்ளலிடம் செல்லும் வழியை விளக்கி, தாம் சென்ற அவ்வழியாற் போகச் செய்தல் ஆற்றுப்படை எனப்படுகிறது. இந்த வகையில் அழியாச் செல்வமாகிய பேரின்பத்தைப் பெற விழையும் பெருமக்களை முருகனிடம் ஆற்றுப்படுத்துவதாக இருப்பது திருமுருகாற்றுப்படை. ஆக, இது ஒரு முந்துதமிழ்ப் பயண வழிகாட்டி நூல் எனக் கூறலாம்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருமுருகாற்றுப்படை தோன்றக் காரணம்

            திருமுருகாற்றுப்படை இலக்கியம் எழுந்த வரலாறு மிகச் சுவையானது.  நக்கீரனாரின் கதை திருவிளையாடற் புராணத்திலும் இடம்பெறுகின்றது என்பதை முன்னரே பார்த்தோம். அதாவது தருமி என்ற ஏழைப்புலவனுக்கு பொற்கிழி அளித்த மதுரையாண்டவன், சொக்கனின் திருவிளையாடலில், இறைவனுடன் நேருக்கு நேர் நின்று வாதம் செய்து ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று வாதிட்டு, இறையனாரின் திருப்பாடலில் குற்றங்கண்டு, அதனால் அவர் தம் திருவிளையாடலால் திருநுதல் வெப்பச்சூட்டிற்கு இலக்காகி வெப்பு நோய் வருத்த, அது தீரும் பொருட்டும் தன் குற்றம் நீங்கும் பொருட்டும் பனிபடர் பெருமை கயிலை மாமலைக்குச் செல்லமுற்பட்டு, திருப்பரங்குன்றத்தில் ஒரு நாள் பகற்பொழுதில் சிவபூஜை செய்தார். அப்போது ஒரு அதிசயம் இடம்பெற்றது.

nakkeerar - 2026

            ஒரு மரத்திலிருந்து விழுந்த இலை இரண்டாகப் பிரிந்தது. ஒரு பாதி பறவையாக மாறிப் பறந்தது. இன்னோர் பாதி மீனாகி நீர்நிலையுள் ஓடி மறைந்தது. இதனைக் கண்ட நக்கீரார் சிவபூஜையிலிருந்து ஒரு கணம் தம்மை மறந்து இவ்வதிசயத்தில் மயங்கிப் போனார். இந்த மாயையைச் செய்து காட்டி சிவபூஜையிலிருந்து நக்கீரர் குழம்பக் காரணம் ஒரு பெண். வெறும் பெண்ணல்ல… கற்கிமுகி என்ற பெண்பூதம். சிவபூசையிலிருந்து தவறிய ஆயிரவரைப் பலி கொடுத்து ஒரு மஹாயாகத்தை ஆற்றக் காத்திருந்தது.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

            அப்பூதம் முன்னரே தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரைப் பிடித்துத் தன் குகையில் அடைத்து வைத்திருந்தது. ஆயிரமாவது ஆளுக்காகத் தேடிக் கொண்டிருந்தது. இப்போது நக்கீரரையும் பிடித்ததும் அது மிக்க மகிழ்ச்சியடைந்தது. ஆயிரவர் தொகை நிறைவு பெற்றது. மகிழ்ச்சியுடன் யாகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது. உள்ளே முன்னரே பிடித்து வைக்கப் பட்டிருந்தவர்கள் கதறினார்கள். நக்கீரரை நோக்கி அழுதார்கள். ‘நீர் வந்து எம் உயிரையும் கொண்டு போகிறீரே’ என்று புலம்பினார்கள். அனைவருக்கும் சமாதானம் சொன்ன நக்கீரர் வெற்றிக்கடவுள் வேற்படையுடைய தமிழ்க்கடவுள் முருகவேளை நோக்கி ‘திருமுருகாற்றுப்படை’ என்ற அதியற்புதச் சுந்தரச் செந்தமிழ் நூலை குகைச் சிறையிலிருந்து பாடினார். உலகிலேயே சிறையிலிருந்து எழுந்த முதல் இலக்கியம் திருமுருகாற்றுப்படையே.

            எல்லோரதும் இதயக்குகையாகிய ‘தகராகாசத்தில்’ நீங்காது உறையும் குகனாகிய குமரன், கற்முகியின் குகை வெடிக்க, பூதம் அழிய, புலவர்கள் சிறை மீள, தன் திருக்கை வேலாயுதத்தைச் செலுத்தியருளினான். நன்றே நடந்தது. இப்படி ஆயிரவர்க்கு உயிர் கொடுத்த இலக்கியம் திருமுருகாற்றுப்படை.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.