
சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் –பகுதி -26
தெலுங்கில்: பி.எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
ஜல மௌக்திக நியாய: – ஜலம் – நீர், மௌக்திகம் – முத்து.
இடம், பொருள், சூழ்நிலையை ஒட்டி ஒரு நீர்த் துளி எவ்வாறு வடிவம் பெறுகிறது என்று கூறும் நியாயம் இது.
இந்த நியாயத்துக்குப் பொருத்தமாக நல்ல மனிதர்களின் தோழமையால் கிடைக்கும் நன்மை என்ன என்பதை உதாரணத்தோடு பர்த்ருஹரி விளக்குகிறார்.
ஸ்லோகம்:
சந்தப்தாயஸி சம்ஸ்திதஸ்ய பயஸோ நாமாபி ந ஸ்ரூயதே
முக்தாகாரஸ்தயோ ததேவ நலிநீபத்ரஸ்திதம் ராஜதே !
மத்யே சாகர ஸுக்தி மத்ய பததம் தன் மௌக்திகம் ஜாயதே
ப்ராயேணாதம மத்ய மோத்தமகுணா: சம்சர்கதோ தேஹினாம் !!
பொருள்:
சூடாக இருக்கும் பாத்திரத்தில் விழும் நீர்த்துளி ஆவியாகி வடிவத்தை இழக்கிறது. தாமரை இலையின் மீது விழுந்த நீரத்துளி முத்துப்போல பிரகாசிக்கிறது. சுவாதி நட்சத்திரத்தின் போது சமுத்திரத்தின் நடுவில் உள்ள முத்துச்சிப்பிக்குள் விழும் நீர்த் துளி சில காலம் கழித்து முத்தாக மாறுகிறது. அவ்விதமாக மனிதர்கள் உயர்ந்த குணங்களோடு கூடியவரோடு நட்பாக இருந்தால் உயர்ந்தவர்களாக வடிவம் பெறுகிறார்கள். அவ்வாறின்றி கீழ் மக்களோடு சேர்ந்தால் கீழ்மையான குணங்கள் கொண்டவராக மாறுகிறார்கள்.
மிகவும் அற்புதமான ஸ்லோகம் இது. இதில் மூன்று விதமான மனிதர்களின் மனநிலையை விவரிக்கிறார். ஒருவர் உத்தமர்களைப் போல தோற்றமளிப்பவர் – தாமரை இலைத் தண்ணீர்போல. மற்றவர் காலக்கிரமத்தில் நல்ல சங்கத்தால் நல்லவராக மாறுகிறார்கள் – முத்துச்சிப்பியில் விழும் நீர்த்துளி போல. மூன்றாவது ரகம் கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களோடு சேர்ந்து பெயரும் வடிவும் இன்றிப் போகிறார்கள்.
எப்படிப்பட்டவர்களோடு சகவாசம் செய்தால் எவ்வாறு மாறுவார்கள் என்று கூறும் இந்த ஜல மௌக்திக நியாயம் – டெல் மீ யுவர் பிரண்ட்ஸ், ஐ வில் டெல் யு வாட் யு ஆர் – என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.
நல்லவர்களோடு நட்பாக இருந்தால் வெற்றியும், தீயவர்களோடு சேர்ந்தால் அழிவும் அடைகிறான் மனிதன் என்று கூறுகிறது இந்த நியாயம்.
முத்தாக மாறிய நீர்த் துளியைப் பார்த்து மீதி உள்ள நீர்த்துளிகள், ‘எங்களுக்கு அநியாயம் நடந்தது’ என்று நினைப்பது சரியல்ல. நீர்த்துளிகள் எல்லாம் ஒன்றே ஆனாலும் அவை விழும் இடத்தை பொறுத்து அதன் மாற்றம் நிகழ்கிறது. சமுத்திரத்தில் விழுந்த நீர்த் துளி உப்பு நீராக மாறுகிறது. கங்கை நதியில் விழுந்த நீர் கங்கையாக மாறி புனிதம் பெறுகிறது. சேற்றில் விழுந்த நீர் சேறாகவே மாறுகிறது.
சாங்கத்தியத்தை பொறுத்தும் வளர்ந்த சூழ்நிலையைப் பொருத்தும் மனிதனின் நடத்தை இருக்கிறதே தவிர, பிறப்போடு தொடர்புடையது இல்லை என்று கூறுகிறது இந்த நியாயம்.
அனைவருக்கும் அறிமுகம் உள்ள ஒரு கதை உள்ளது. ஒரு சிறு குழந்தையை ஒரு ஓநாய் தூக்கிச் சென்றது. பன்னிரண்டு ஆண்டுகள் மனிதத் தொடர்பில்லாத காட்டு மிருகங்களால் அவன் வளர்க்கப்படுகிறான். அவனுக்கு மனித மொழி தெரியவில்லை. அதன்பிறகு நடந்த கதை அனைவரும் அறிந்ததே. மனிதனாக எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தாலும் வளரும் சூழ்நிலையைப் பொறுத்து மாற்றம் பெறுவான் என்று இந்த கதை கூறுகிறது.
அம்புலிமாமா பத்திரிக்கையில் வரும் இரண்டு கிளைகளின் கதை கூட அனைவருக்கும் தெரிந்ததே. ஒரே கிளிக்குப் பிறந்த இரண்டு கிளிக் குஞ்சுகளும் விபத்தின் காரணமாக பிரிந்து போய்விடுகின்றன. ஒன்று ஒரு சாதுவின் பாதுகாப்பில் வளர்ந்தது. “வாருங்கள்! உட்காருங்கள்! ஓய்வெடுங்கள்!” என்று அன்போடு கூறுகிறது.
இன்னொன்று, “யாரடா அவன்? உன் நகைகளை எடு. உன்னை கட்டிப்போடுவேன்” என்று அதட்டுகிறது. காரணம் இரண்டாவது கிளி ஒரு வழிப்பறித் திருடனிடம் வளர்ந்தது. இவ்வாறு வளர்ந்த சூழலைப் பொருத்தும் இடத்தை பொருத்தும் நடத்தை மாறுகிறது. ஒரே தாய்க்குப் பிறந்த குழந்தைகள் ஏன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள்? அதற்கான காரணத்தை கூறுகிறது இந்தக் கிளிகளின் கதை.
பள்ளிக்கூடத்தில் சேர்ந்த குழந்தைகளின் பேச்சு மாறிவிடுகிறது. ஆசிரியர்கள் அல்லது உடன் படிக்கும் மாணவர்கள் கூறும் சில திட்டுகளை, அது தவறு என்று தெரியாமல் நம் வீட்டு சிறுவன் திரும்பக் கூறுவதை அனுபவத்தில் காண்கிறோம்.
குணங்களில் ஏற்படும் குறைகளுக்குக் காரணம் சகவாசமே என்று இந்த ஜல மௌக்திக நியாயம் கூறுகிறது
புனே நகரத்தில் ஓய்வு பெற்ற ஒரு பள்ளியின் பதவி ஓய்வு பெற்ற பிரின்சிபால் கே.எல். பட்வர்தன் என்பவர் ஆர்எஸ்எஸ் மூலம் 1979ல் சொரூபவர்தினி என்ற அமைப்பைத் தொடங்கினார் அதில் சமுதாயத்தில் தனித்துவம் இல்லாத, பொருளாதாரத்திலும் பலவீனமான மக்களுக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார். நாற்பது ஆண்டு கால முயற்சியின் காரணமாக அந்தக் காலனியில் வசிக்கும் குழந்தைகள் ஒழுக்கம் மிகுந்தவர்களாக, டாக்டர்களாகவும், பேராசிரியர்களாகவும் உருவாகி அந்த அமைப்பை முன் நடத்திச் செல்கிறார்கள். சொரூபவர்தினி நன்மக்கட்சங்கத்தின் அந்த பயிற்சி இல்லாவிட்டால் அந்தக் காலனி பிள்ளைகள் என்னவாகியிருப்பார்களோ?
ஜல மௌக்திக நியாயத்திற்கு உதாரணமாக லாட்டு மகராஜ் கதையைக் கூறலாம். லாட்டு மகராஜ் என்று அன்போடு அழைக்கப்படும் ஆத்மானந்த சுவாமி ஒரு உண்மையான யோகி. அநாகரீகமாக இருந்த கிராமத்துப் பையன். குருதேவரான ஸ்ரீராமகிருஷ்ணர பரமஹம்சரிடம் பயிற்சி பெற்று பிரம்மஞானியாக ஆனார். லாட்டு மஹராஜ் பற்றி சகோதர சுவாமி விவேகானந்தர், “லாட்டு, ஸ்ரீராமகிருஷ்ணரின் அற்புதமான தயாரிப்பு. சிறு துளியும் கல்வி அறிவு இல்லாமல் வெறும் குருதேவரின் ஸ்பரிச தீட்சையால் மிக உன்னதமான பிரம்மஞானத்தை பெற்றவர்” என்று போற்றுகிறார். சாதாரண நீர்த்துளி முத்தாக மாறிய முறை இது.
குழந்தையாக இருக்கும்போதே ஆதிசங்கரர் தம் வீட்டிற்கு வந்த சாது சத்குருஷர்களின் சகவாசத்தை விரும்பினார். அவர்களில் ஒருவர் ஒரு உணவு வேளையில் சங்கரரைத் தன்னோடு அமர்த்தி கொண்டு அவருக்குத் தம் கையால் உணவு ஊட்டினாராம். வேதாந்தப் பண்பாடு பழக்கப்படுவதற்கு சிறுவயதிலிருந்தே விதை நாட்டப்பட்டது. ஜல மௌக்திக நியாயத்திற்கு இது ஒரு உதாரணம்.
பிரதம மந்திரியின் காரியாலயத்தில் பணிபுரியும் ஒரு சீனியர் அதிகாரி அண்மையில் ஒரு கூட்டத்தில், திரு நரேந்திர மோதிஜி பிரதமராக ஆனபின் அவருடைய காரியாலயத்தில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களைப் பற்றி புகழ்ந்து பேசினர். பிரதமரின் செயல்பாட்டால் அனைவரும் முன்பை விட அதிகமாக நாட்டுக்காக சிரமப்பட்டு உழைக்கிறார்கள் என்றும், உணவு இடைவேளையில் சாப்பாட்டுக்காக வெளியில் சென்று நேரத்தை வீணாக்கும் முறை நிறுத்தப்பட்டு லஞ்ச் பாக்ஸ் எடுத்து எடுத்து வருகிறார்கள் என்றும் கூறினார். ஜல மௌக்திக நியாயத்திற்கு இது ஒரு நிகழ்கால உதாரணம்.
ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் இரண்டாவது சர்சங்சாலக் திரு கோல்வர்கர் குருஜிக்கு இருக்கும் உத்தம குணங்களைப் புகழ்ந்து எழுதிய பாடலில், “ஆகயா சம்பர்க் மே ஜோ தன்யதா பாயீ உஸேனே” என்பார் கவி. குருஜியின் சத்சங்கத்தால் பல நீர்த் துளிகள் முத்துக்களாக மாறின என்பது இதன் பொருள்.
பாலைவன மணலில் விழுந்த நீர்த் துளி காணாமல் போகிறது அல்லது மேற்சொன்ன சுபாஷிதத்தில் கூறியது போல சூட்டிற்கு ஆவியாகித் தன் உருவத்தை இழக்கிறது. சூடான பாத்திரத்தில் பட்ட நீர்த் துளிக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றி நினைக்கும் போது தேசத் துரோக கம்யூனிஸ்ட்கள் நினைவுக்கு வருகிறார்கள். பாரத தேச கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாமல், வேற்றுநாட்டு துன்பச் சாயலில் தொடங்கப்பட்ட கட்சியோடு கூட்டு சேர்ந்தவர்கள் அபகீர்த்தி அடைவார்கள் என்கிறது வரலாறு. அவ்வாறு நஷ்டமடைந்தவர்களில் காங்கிரஸ் கட்சியும் ஒன்று. சுதந்திரப் போராட்டத்தில் தியாக வாழ்க்கை வாழ்ந்த முக்கிய தேச பக்தர்கள் நடத்திய காங்கிரஸ் பார்ட்டிக்கு வராலற்றில் முக்கியமான இடம் உள்ளது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இடதுசாரிகளோடு கூட்டு சேர்ந்து சேற்றில் விழுந்த நீர்த்துளி போல ஆனது அந்த கட்சி.
எதிர்மறை உதாரணமாக காட்டக்கூடிய இடதுசாரிகள் ஆயிரக்கணக்கான வரலாற்று தவறுகளைச் செய்தார்கள். யாராவது சமரசத்தோடு ஒற்றுமையாக இருந்தால் இவர்களுக்குப் பொறுக்காது.
அயோத்தி ராமர் கோயில் விஷயத்தில் உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் உண்மையை ஏற்றுக் கொண்டு அக்கிரமக்காரன் பாபர் துவம்சம் செய்த கட்டடத்தை மீண்டும் ஹிந்து சமூகத்துக்குச் சமர்ப்பித்து தம் உதார குணத்தைக் காட்டுவதற்குத் தயாரான நேரத்தில், இந்தப் போலி மேதாவிகள் அவர்களை உசுப்பி விட்டு, உண்மையற்ற பொய் வரலாற்றை அவர்கள் தலையில் ஏற்றி, கோர்ட்டை நாடும்படித் தூண்டி விட்டார்கள். வரலாற்று சமரசத்திற்கு தொடர்புடைய ஒரு நல்ல வாய்ப்பை அந்த சமூகத்திடமிருந்து விலக்கி வைத்தார்கள்.
அதனால்தான் நன்மக்களின் சங்கம் பயன்படும் என்று கூறப்படுகிறது. ‘சாதனா பஞ்சகம்’ என்ற பஞ்சாமிர்தத்தை நமக்கு வழங்கிய ஆதிசங்கரர் “சங்கஸ்ஸத்ஸு விதீயதாம்” – சத்புருஷர்களோடு முயற்சி செய்து சகவாசம் செய்ய வேண்டும் என்ற போதிக்கிறார்.
ஞானச் செல்வம் உடையவர்களோடு சிநேகமாக இருக்க வேண்டும். ஞானிகளை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கிறது இந்த ஜல மௌக்திக நியாயம்.