
பகவத் கீதை – பகுதி 4 : கைவர்தக: கேசவ:
முனவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
எனது தந்தையார் கே.எஸ். வைத்தீஸ்வரன் சொல்லுகின்ற இரண்டாவது பகவத்கீதை ஸ்லோகம், பகவத்கீதையின் த்யான ஸ்லோகங்களில் ஒன்று. அந்த ஸ்லோகம் பின்வருமாறு –
பீஷ்மத்ரோணதடா ஜயத்ரதஜலா காந்தார நீலோத்பலா
சல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ கர்ணேந வேலாகுலா
அஸ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதநாவர்திநீ
ஸோத்தீர்ணா கலு பாண்டவை ரணநதீ கைவர்தக: கேசவ:
பூபாரம் தீர்க்க வந்தவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதன் விளைவு மகாபாரதப்போர். இந்த ஸ்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.
இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்கின்றனர். இவர்களைத் தாண்டி அந்த நதியினுள் யாரும் புக முடியாது. வெளியே வரவும் முடியாது. ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரி துச்சலையின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம். அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.
சகுனி நீலோத்பலம் என அழைக்கப்படும் நீலத்தாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும். சல்லியன் முதலை. நீரில் முதலை எவ்வளவு வலிமையானது என நாம் அனைவரும் அறிவோம்.
கிருபர் நதியின் வேகம். ஆங்கிலத்தில் இதனை viscous flow என்பார்கள். நதியில் மூழ்கி, மீண்டும் எழும்போது சிறிது தூரம் தள்ளி நாம் எழுவோம். ஹரித்வார் படித்துறையில் கங்கை நதி வேகமாக ஓடுவதால் நாம் பிடித்துக்கொண்டு மூழ்குவதற்காக சங்கிலிகள் கரையருகில் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனைப் போலவே கிருபரும் தன்னுடன் பொரில் ஈடுபடுபவர்களை இழுத்துக்கொண்டு சென்று அழித்து விடுவார் என்பதற்காக இந்த உருவகம். கர்ணன் அந்த நதியின் அலை. அலையடிக்கும்போது மக்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பார்கள்.
அதுபோல கர்ணன் போரிடும்போது பலர் உயிரிழப்பர் என்பதை இந்த உருவகம் சுட்டிக்காட்டுகிறது. அஸ்வத்தாமன் விகர்ணன் போன்றவர்கள் சுறாமீன்கள் போன்றவர்கள்.
துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான்.
அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.



