“ஸ்ரீ பெரியவாளின் புரட்சி” (என்னே கருணை!) சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
எந்த ஊரில் (பொட்டல் கிராமமாக இருந்தாலும்)
இரவு எவ்வளவு நேரமானாலும் கூட ஸ்ரீ பெரியவாளின்
முகாமிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஆகாரம்
செய்து வைக்குமாறு சிப்பந்திகளுக்கு ஆக்ஞை
செய்வார்கள். அதோடு நிற்காமல், சற்று நேரத்திற்குப்
பிறகு அந்த சிப்பந்திகளை தனித்தனியே அழைத்து
‘வந்தவாளுக்கு என்ன ஆகாரம் பண்ணி வைத்தாய்?
என்று வினவும் பாங்கு பெரியவாளுக்கு உரியது.
வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது.
பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம் பெரியவாள், “எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று கேட்பார்கள்.
“என் பாக்கியம்”
“சிவாஸ்தானம் யானைகட்டித் தெருவிலே உள்ள
வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு,காரம்
பக்ஷணங்களை பண்ணி நீயே போய் கொடுத்துட்டு வா”
பிறகு சில நாட்களில் அந்தப் பாடசாலை குழந்தைகள்
வந்தால் உடனே, “அன்று பக்ஷணம் வந்ததா?
சாப்பிட்டாயா? என்று அக்கறையோடு கேட்பார்கள்.
(மாடுகூடத் திங்காத அழுகல் வாழைப்பழம்
வேதபாடசாலைப் பையன்களுக்கு’ என்று பழமொழிபோல்
கூறப்பட்ட காலத்தில் ஸ்ரீபெரியவாளின் பெரிய புரட்சி இது)
ஸ்ரீமடம் எங்கு முகாம் செய்தாலும் பெரியவாளின்
உத்திரவுப்படி, விசேஷமாக, கோடை காலத்தில்
தண்ணீர் பந்தல் போல் பக்த ஜனங்கள் யாவர்க்கும்
நீர்மோர் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்.
விசேஷமாக ஓரிருக்கை கிராமத்தில் கடும் கோடையில்
பாலாற்றின் கரையில் பெரியவாள் குடிசையில் அமர்ந்து
கொண்டு, வருபவர்கள் அனைவருக்கும் நீர்மோர்
வழங்கும் குளிர்ச்சியான காட்சி வர்ணிக்க முடியாது.