ஶ்ரீரங்கம் பகல் பத்து -இரண்டாம் திருநாள்

இன்று பகல் பத்து -இரண்டாம் திருநாள் …(விவரம்)
அரங்கன் மகிழும் அத்யயன உற்சவம் ….

அத்யயன உற்சவத்தின் (பகல் பத்து ) முதல் திருநாளினைப் போலவே,அனைத்து வைபவங்களும் நடைபெறும்.இந்த
இரண்டாம் திருநாளில் (12-12-15) மாற்றம் என்னவென்றால், நம்பெருமாள் சாற்றிக்கொள்ளும் திருவாபரணங்களும்,
(நகைகள்) அரையர் சேவை பாசுரங்கள் மட்டுமே…

இந்த பகல் பத்து உற்சவம் முழுவதும்,நம்பெருமாள்
ஒருநாளுக்கு ஒருஒரு விதமான,கபாய்(அங்கி) சாற்றியும்,
பல விதமான திருவாபரணங்கள் சாற்றிக்கொண்டும்,கிரீடம்
அல்லது குல்லாய், ராஜமுடி அல்லது சவுரிமுடி, வைரமுடி இவைகளையும்,

செங்கழுநீர் பூக்களாலும்,கதிர்பச்சை இலைகள் கலந்த பூச்செண்டை,பின்புறம் முடிச்சில் திருக்குழல் கற்றையாக சாற்றிக்கொண்டு,மதுரகவிஸ்வாமிகளின் ,பிருந்தாவனத்தில்
இருந்து மட்டுமே அரங்கனுக்காக,நியமத்தோடும்,பக்தியோடும்
தயார் செய்யப்படும் பூமாலைகளையும் சாற்றிக்கொண்டு
சேவை சாதிப்பார்….

நம்பெருமாள் திருவாபரணங்கள் பலவற்றை ,இந்த உற்சவத்தின் ஒவ்வொருநாளும் சாற்றிக்கொண்டு,சிம்ம கதியில் கருவறையில் (காயத்ரி மண்டபத்தில்) இருந்து புறப்பாடு கண்டருளுவார்.

(சிம்மம்-சிங்கம்.ஸிம்ஹ கதி- சிங்கநடை )

அவ்வாறு புறப்பாடு கண்டு வெளியில் வரும் சமயம், சந்தனமண்டபத்திற்கு,எழுந்தருளியவாறே,இரண்டடி ஒய்யார நடையிட்டு,தன்னுடைய பரத்வத்தை வெளிபடுத்துகிறார்…

நம்பெருமாள் சிம்ம கதியில்(சிங்கநடை போட்டு)
மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சந்தனமண்டபத்திற்கு
வரும் முன்,வேத்ர பாணிகளாகிய,(பாதுகாவலர்கள்)
சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்கள் கட்டியம் சேவிப்பர்….

(கட்டியம் = கட்டு + இயம். மன்னர் மரபு, அவரின் வெற்றி, புகழ் முதலியவற்றைக கட்டிக் கூறுதல்.அரங்கன் ஸ்ரீ ரங்கராஜன் ஆகையாலே,அரங்கனுக்கும் கட்டியம் கூறப்படுகிறது )

முதலில் வடமொழியான ஸம்ஸ்க்ருதத்தில் ஒருகட்டியமும்,
பிறகு தமிழ்மொழியில் ஒருகட்டியமும் சேவிப்பார்கள்….
அந்த கட்டியம் இதோ…..

“ஸ்ரீ யதி புரந்தராபராவதாரபூத ஸ்ரீவரவரமுநி ஸமுபந்யஸ்த

த்ராமிட ப்ரம்ஹ ஸம்ஹிதா ஸஹஸ்ர ஸாகா வ்யாக்யாந ஸ்ரவண ப்ரகுணித பரமாநந்த

பாரவஸ்ய ப்ரக்யாபித ததாசார்யபாவ ரங்கேஸ்வரா
எச்சரீகை…|

மன்னியசீர் மணவாளமாமுனி ஈடுரைப்பது கேட்டு
பின்னொரு ஸ்ரீசைலேசா எனப்பேசுமரங்கா, எச்சரீகை ||

என்று கட்டியம் கூறுவார்கள் ….

பிறகு ,மேலைப்படியில் கோயிலின் ஸ்தலத்தார்களுக்கும்,
தீர்த்த மரியாதை உரிமை உடையவர்களுக்கும்,மரியாதைகள் நடைபெறும்.

பிறகு நம்பெருமாள் மேலைப்படியை விட்டு கீழே இறங்கி,
வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பார்.அப்போது அரங்கனின் அரையர்களை நோக்கி,
“இசையறியும் பெருமாள் கூட்டத்தார்” என்ற “அருளப்பாடு” சாதிக்கப்படும்.பெருமாளின் அனுமதி பெற்ற பின்னரே இது தொடங்கும்.இந்த அனுமதிக்கு அருளப்பாடு என்று பெயர்.
இது கிடைத்தவுடன் அரையர்கள் “நாயிந்தே’ என்று கூறி,
உடனே அரையர் ஸ்வாமிகள், தாளத்தோடு,இசையை தொடங்குவார்கள்…

இதன்பிறகு,நம்பெருமாள் சேனைமுதலியார் சந்நிதியின்,
முன்புறம் எழுந்தருளி, சேனை முதலியாருக்கு மரியாதைகள் நடைபெறும்.பிறகு பகல்பத்து (அர்ஜுன)மண்டபத்தின்
முன் பகுதியில் உள்ள, கிளிமண்டபத்தில் நம்பெருமாள்
படியேற்ற சேவை ஆகும்.

கிளிமண்டபத்தில் “சாரீயோம்” என்ற அருளப்பாடு சாதிக்கப்பட்ட உடனே, நட்டு முட்டு வாத்தியங்கள் முழங்கப்படும்.

“சாரீயோம்” என்ற அருளப்பாடு,நல்ல குரல்வளம் படைத்த நட்டுவாங்கனை நோக்கி கூறப்படுவதாகும்.ஒருகாலத்தில் (முற்காலங்களில்) கிளிமண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளியவுடன்,நல்ல குரல்வளம் மிக்க நட்டுவாங்கன் பாட, வாத்தியங்கள் முழங்க,தாஸிகள் நர்த்தனம் ஆடி வருவார்களாம்.
1953 ம் ஆண்டு,தாஸிகள் ஒழிப்புச் சட்டத்தின் படி,இத்தகைய இசையுடன் கூடிய நடனங்கள் நின்று போயிற்று…

(குறிப்பு- தாஸிகள் என்றால்,அரங்கனை தலைவனாக
ஏற்ற,அரங்கனுக்கு மட்டுமே கைங்கர்யங்கள் (சேவைகள்)
செய்கின்ற பெண் அடியார்கள்…ஆனால் காலப்போக்கில்
இதற்கு தவறான,அனர்த்தமான பொருளுடன், சில அர்த்தம் புரியாதவர்களால், வேறு அர்த்தங்கள் பரப்பப்பட்டது…
அரங்கனை அன்றைய துலுக்க ராஜாக்களிடம் இருந்து
காப்பாற்றியது “வெள்ளையம்மாள்”என்னும் பேரழகியான,
இந்த நடன கூடத்தினைச்சேர்ந்த ஒரு தாஸிதான் என்பது வரலாறு.அரங்கனை கொள்ளை அடிக்கவும்,ஆலயத்தை கைப்பற்றவும் வந்த துலுக்க அரசனை, கோபுரத்தின் மேலே அழைத்துச் சென்று,தள்ளிவிட்டு கொலைசெய்து,தானும்
உயிரை மாய்த்துக்கொண்ட,தாஸி வெள்ளையம்மாளின்
அரங்கனுக்காக செய்த,தியாகத்தையும் ,சேவையையும் ,
துலுக்க அரசனைக் கொன்று,தானும் தற்கொலை செய்து
கொண்ட,நிகழ்வை குறித்தே, அரங்கனின் கிழக்கு வாயிலின் கோபுரத்திற்கு “வெள்ளை கோபுரம்” என்ற பெயர் அன்றிலிருந்து இன்றும் அழைக்கப்படுகிறது.தாஸி என்பவர்கள்
எம்பெருமானுக்கு மட்டுமே ,சேவகம் செய்பவர்கள்
என்பதை மனதில் கொள்க.வேசி என்ற வார்த்தையும்,
தாஸி என்ற வார்த்தையும் வேறு உவமைகளைச் சொல்லும் )

பிறகு,நம்பெருமாள், கிளிமண்டபத்தில் இருந்து படியேற்றம் ஆகி, அர்ஜுன மண்டபத்தின் உள்ளே நுழைவார்..அதன்பிறகு
நம்பெருமாள் “சுரதானி” என்னும் துலுக்க நாச்சியார் சந்நிதிக்கு எதிரில்,படியேற்றசேவை சாதித்து,.அங்கே சித்திர ரூபமாக (ஓவியமாக) எழுந்தருளி இருக்கும்,”சுரதானி” என்னும்
துலுக்க நாச்சியார் முன்பு,சேவை சாதிப்பார்…அரையர்கள் கொண்டாட்டம் ஆனபிறகு,பகல்பத்து உற்சவம் நடைபெறும் அர்ஜுனமண்டபத்திற்கு ,நம்பெருமாள் எழுந்தருளியிருப்பார்.

நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் (பகல்பத்துமண்டபம்) எழுந்தருளியிருக்கும் போது,கீழ்க்கண்டவாறு,
ஆழ்வார்களுக்கும்,ஆச்சார்யர்களுக்கும்,அருளப்பாடு சாதிக்கப்படும்.

திருநாளுடையபிரான்,(கலியன்) ராமானுசன், பட்டர்பிரான், மதுரகவி,பொய்கை,பூதம்,பேயார்,சேரன்,பாணன்,
தொண்டரடிப்பொடி,மழிசை,நம்பி,ஆழ்வான்,
பிள்ளைலோகாச்சாரியாருக்கு அருளப்பாடு என்று,
அரங்கன் ஆலய ஸ்தாநீகர் அருளப்பாடு சாதிப்பார்….
ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்…

அதன் பிறகு பெரியாழ்வார் திருமொழியில் இருந்து,பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி” துக்கச்சுழலை” என்று தொடங்கும்,
பாசுரம் தொடங்கி,மொத்தம் 250 பாசுரங்கள், அரையர் ஸ்வாமிகளால்,அர்ஜுன மண்டபத்தில்,அரங்கன் கேட்டு மகிழ்வார்….

அந்த பெரியாழ்வார் திருமொழி பாசுரங்களில் “ஆற்றிலிருந்து” எனத்தொடங்கும் பாசுரத்திற்கும்,”தன்னேராயிரம்” எனத்
தொடங்கும் பாசுரத்திற்கும்,இந்த இரண்டு பாசுரங்களுக்கும்,
அரையர் ஸ்வாமிகள் அபிநயம் மற்றும் வியாக்கியானங்கள் சேவிப்பர்….

அரையர்களின் தாளத்துடன் ,அரங்கன் பாசுரங்களைக் கேட்டு
மகிழ்ந்த பிறகு, அரங்கனுக்கு நிவேதனம் நடைபெறும்.
நிவேதன விநியோகங்களும் நடைபெறும்.
அர்ஜுன மண்டபத்தில்(பகல்பத்து) ஆழ்வார்கள் மற்றும்
ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.அதன் பிறகு,
ஆழ்வார் ஆச்சாரியர்கள், ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன்,
தங்களுடைய சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்.

நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி,
ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் உள்ள “மீனாட்சி மண்டபத்தில்”
தீர்த்த கோஷ்டி நடைபெறும்.சிறிது நேரம் நம்பெருமாள்,
“பத்தி உலாத்துதல்” ஆகி, மேலப்படியில் படியேற்றம் ஆகி, திருவந்திக்காப்பு (ஒருவித ஆரத்தி) கண்டருளுவார்.
பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில், கருவறைக்குள் (காயத்ரிமண்டபம்) எழுந்தருளுவார்.

அரங்கன் இந்த திருநாள்களில், காலையில் கருவறையில்
இருந்து, ஸிம்ஹ கதியில் புறப்படுவார்.
(ஸிம்ஹம்-சிங்கம்,ஸிம்ஹகதி-சிங்கநடை)

அரங்கன்(நம்பெருமாள்) அர்ஜுன மண்டபத்தில் இருந்து,
புறப்பாடு கண்டருளும்போது,கஜகதியில் பத்தி உலாவுவார்.
(கஜம்-யானை,யானையைப் போல் நடந்து சேவை சாதிப்பார்.
இதற்கு கஜகதி என்று பெயர்)

ஸர்ப்ப கதியில் நம்பெருமாள் மூலஸ்தானத்திற்கு எழுந்தருளுவார்..(சர்ப்பம்-பாம்பு-சர்ப்பகதி-பாம்பினைப்போல் ஊர்ந்து சேவை)..

ரங்கா ரங்கா ரங்கா…