ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஏழாம் திருநாள்

பகல் பத்து -7 ம் திருநாள் விவரமும்…(17-12-15)
மார்கழி முதல் நாள் உடையவர் சந்நிதி கோஷ்டியும்…..

மார்கழி மாதம் பெரியபெருமாள் அமுதுசெய்யும் பிரசாதமும்,அதையே அமுது செய்யும் உடையவரும்…

அரங்கனின் 4 ம் திருநாளைப்போலவே,இன்றும் 2 அரையர் சேவைகள் நடைபெறும்.”பெரிய திருமொழி” “தூவிரிய மலர் உழக்கி “பதிகம் தொடங்கி,
“கைம்மான மழகளிற்றை கடல் கிடந்த கருமணியை” பதிகம் ஈறாக,மொத்தம் 210 பாசுரங்கள் சேவிக்கப்படும்.

அரையர் முதல் சேவை….

“தூவிரிய மலருழக்கி ” பாசுரத்திற்கு,அபிநய
வியாக்கியானங்கள் ஆகி, அத்திருமொழி 5 ம் பாட்டில்,” மண்ணளந்த தாளாளா “பாசுர சொற்றொடருக்கு இணங்க,எம்பெருமாள் எடுத்த,வாமன அவதாரத்தை நடிப்பதற்காக,அந்த “பெரிய திருமொழி” யின் மேற்கொண்ட பாட்டுக்களை சேவியாமல்,மற்றைய திருமொழிப்
பாசுரங்களை சேவிப்பார்கள்…

அரையர் இரண்டாம் சேவை…(வாமன அவதாரம்)

அரையர்கள் “தம்பிரான் படி” சேவித்து,வாமனாவதார வைபவத்தை,அரங்கன் முன்பு நடித்துக் காட்டிய பிறகு,
“பெரிய திருமொழி” யில் முன்பு நிறுத்திய பாசுரங்களை சேவிப்பார்கள்…

ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஸ்ரீ பராசர பட்டரால்,
திருத்திப் பணிகொள்ளப்பட்ட,ஸ்வாமி “நஞ்சீயர்” என்பவர்,திருவரங்கத்தில் 36 ஆண்டுகள்,
ஆச்சார்ய பீடத்தில் எழுந்தருளி இருந்தார்.

இன்றைய 7 ம் திருநாளில்,அபிநயத்தோடு சேவிக்கப்படும்,
“தூவிரிய மலருழக்கி ” பாசுரத்தினைப் பற்றிய நிகழ்வு ஒன்று,நம்பிள்ளையின் சீடரான”பெரியவாச்சான் பிள்ளை” அருளிச்செய்த,பெரிய திருமொழி
விரிவுரையில் காணப்படுகிறது.

நஞ்சீயர் மிகவும் உடல் நலிவுற்றுக் கிடந்த போது,அவரைப்
பார்க்க வந்த,அவருடைய சீடரான “பெற்றி”என்பவர்,இப்போது தேவரீருக்கு என்னவேண்டும் ?எனக்கேட்க ,அதற்கு நஞ்சீயர்,
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த,”தூவிரிய மலருழக்கி ” பதிகத்தினை காதாரக் கேட்க வேணும் என்றும், நம்பெருமாள் புறப்பட்டு வரும்பொழுது,நம்பெருமாளின் பின்னழகும், முன்னழகும் சேவிக்க வேண்டும் எனவும் தன்னுடைய
சீடரிடம் விருப்பத்தினை தெரிவித்தார்…

நஞ்சீயர் விருப்பப்படியே நம்பெருமாள்,நஞ்சீயருக்காக, அவருடைய மடத்திற்கு,எழுந்தருளி சேவை சாதித்தார். “வரந்தரும்பெருமாள் அரையர்” என்பவரை அழைத்து வந்து,
“தூவிரிய மலருழக்கி ” என்கிற திருமொழியை சேவிக்கச் செய்ய,அதைக் காதாரக் கேட்டுக்கொண்டு இருந்த நஞ்சீயர்,

“தானாக நினையாமல் தன்னினைந்து நைவேற்கு ஓர் மீனாய கொடி நெடுவேள் செய்ய மெலிவேனோ” என்ற பாசுரத்தை,

(எம்பெருமான் தானாகவே என்னை நினையாமல் போனாலும்,அவனையே நினைத்துக் கொண்டு,
மனம் தளர்ந்து இருக்கின்ற என்னை,மன்மதன்
துன்பப்படுத்த நான் இப்படி இளைத்துப் போவேனோ?)

அரையர் பாடியபோது,உடல் நலிவதற்கு முன்பே,
எம்பெருமாள் வந்து உதவாமல் போனாலும்,அந்த நோயை நீக்கவாவது வந்தாலாகாதோ?என்றருளிச் செய்து,
மிகவும் தளர்ந்து வருந்தினாராம்.

மார்கழி முதல் நாள்,பெரிய பெருமாள் திருப்பள்ளியெழுச்சி கண்டருளி,ஆராதனங்களுக்குப் பிறகு,நிவேதனம் (அமுது) செய்விக்கப்படும்…

உடையவர் சந்நிதிக்காரர் ,உபகாரங்களோடு வந்து,பெரிய பெருமாளை சேவிப்பார்.பெரிய பெருமாள் அமுதுசெய்த,பிரசாதத்தை,அர்ச்சகர்,ஸ்தாநீகர்,மணியகாரர் முதலான பரிகரத்தார்,உடையவர் சந்நிதிக்கு,
மேள தாள வைபவத்தோடு கொண்டு போய்,
பெரிய பெருமாள் அமுது செய்த பிரசாதத்தினை ,
உடையவருக்கு அமுது செய்விப்பார்கள்.

பிறகு உடையவர் சந்நிதியில் கோஷ்டி நடக்கும்.ஆண்டாள் மார்கழி விரதம்அனுஷ்டித்த விவரத்தினை தெரிவிக்கும் திருப்பாவை என்னும் திவ்ய பிரபந்தத்தினை,அரங்கனுக்கு தனுர்மாதமான மார்கழி மாதத்தில்,அரங்கனின் திருவாராதனத்தில் சேர்த்தவர் ஸ்வாமி ராமானுஜர்.

ஆகையால்,திருப்பள்ளியெழுச்சி என்னும் பேரால்,மார்கழி
மாதம் முழுவதும்,பெரிய பெருமாள்,தான் அமுது செய்யும் பிரசாதத்தை,தினந்தோறும் உடையவருக்கும் அனுப்புகிறார்.
மார்கழி மாதத்தின்முதல்நாள் பிரஸாதம் மட்டும்,பெரிய கோயிலின் அர்ச்சகர் முதலானோரால் உடையவருக்கு
அமுது செய்விக்கப்படும்….

கட்டுரை விளக்கம்: ஶ்ரீரங்கம் மாலு