
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆதி பிரம்மோற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரம்மோற்ஸவ திருநாளையொட்டி நேற்று அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து அதிகாலை 4 மணிக்கு பிரம்மோற்ஸவ கொடியேற்றம் நடந்தது.
ஆகஸ்ட் 22ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் உற்ஸவத்தின் போது நம்பெருமாள் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி கருட மண்டபத்தில் சேவை ஸாதிப்பார். அங்கு பல்வேறு பூஜைகளுக்கு பின் கண்ணாடி அறை சென்றடைவார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை மற்றும் சின்னப்பெருமாள் தீர்த்தவாரி 21ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவில் திருவிழாக்கள் அதற்கான பரிகார ஹோமங்கள் சகஸ்ர கலச அபிஷேகம் செய்யப்பட்டு ஆகம விதிப்படி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் ‘SRIRANGAM TEMPLE LIVE’ என்ற யு-டியூப் இணையதள முகவரியில் திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.