ஏப்ரல் 22, 2021, 5:14 மணி வியாழக்கிழமை
More

  அரசவல்லி சூரிய நாராயணர் கோவில்!

  ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஸ்ரீகாகுளம் மண்டலத்தில் அரசவல்லி என்ற கிராமத்தில் சூரியனுக்கு ஒரு கோவில் உள்ளது.

  arasavalli-sungod-temple
  arasavalli-sungod-temple

  ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஸ்ரீகாகுளம் மண்டலத்தில் அரசவல்லி என்ற கிராமத்தில் சூரியனுக்கு ஒரு கோவில் உள்ளது.

  ஸ்ரீகாகுளம் நகரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த அரசவல்லி  கிராமம் சூரிய நாராயண சுவாமி கோவிலால் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. உஷா, பத்மினி, சாயாதேவி சமேத சூரியநாராயணர் இங்கு தரிசனம் அளிக்கிறார்.

  இங்குள்ள திருக்குளத்தின் பெயர் இந்திர புஷ்கரிணி. முக்கியமாக கொண்டாடப்படும் உற்சவம் ரதசப்தமி. ‘ஓட்ரா’ என்ற ஒரிஸ்ஸா  சம்பிரதாயத்தின் வாஸ்து சிற்பக்கலையை ஒட்டி கட்டப்பட்ட இந்த கோவில் கிபி 673ல் களிங்க அரசர் தேவேந்திர வர்மாவால் கட்டப்பட்டது. 

  இந்த ஆலயம் சூரிய நாராயண சுவாமி கோவில்களில் மிகவும் முதன்மையானது.  ஆந்திர மாநிலத்தில் அரசவல்லி என்ற கிராமத்தில் உள்ள இந்த கோவில் நம் நாட்டில் உள்ள சூரியநாராயண கோயில்களிலேயே மிகவும் பழமையானது. 

  மக்களின் நலனுக்காக காஷ்யப மகரிஷி தேவாலய விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாக பத்மபுராணத்தில் ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆலய நிர்மாணம் குறித்த துவாபர யுகத்தைச் சேர்ந்த ஆதாரங்களும் உள்ளன.

  தன் ஒளிக்கதிர்களால் அனைத்து உயிர்களையும்  உயிர்ப்போடு வைத்திருக்கும் சூரியநாராயணனுக்கு நித்திய பூஜைகள் நடக்கும் கோவில் அரசவல்லி.

  இந்த ஆலயத்தில் பாஸ்கரனை வழிபட்டவர்களுக்கு அனைத்து துன்பங்களும் விலகி மகிழ்ச்சியோடு (ஹர்ஷத்தோடு) திரும்புவார்கள். ஆதலால் ஒரு காலத்தில் இந்த ஊரை ‘ஹர்ஷவல்லி’ என்ற பெயரால் அழைத்தார்கள். அதுவே காலக்கிரமத்தில் அரசவல்லியாக மாறியதாக கூறப்படுகிறது.

  arasavalli-temple
  arasavalli-temple

  மஹாபாஸ்கர க்ஷேத்திரமாக  போற்றப்படும் இந்த ஆலயத்திற்கு மிகவும் கனமான வரலாறு உள்ளதாக தலபுராணம் கூறுகிறது. இந்த ஆலயம் முதலில் தேவேந்திரனால் நிர்மாணிக்கப்பட்டது என்று புராணம் கூறுகிறது. 

  வரலாற்றுப் பக்கங்களை திருப்பி பார்த்தால் அரசவல்லியில் உள்ள ஸ்ரீ சூரிய நாராயணன் ஆலயத்தை கலிங்க அரசர்களில்  கிழக்கு கங்க வம்சத்தினரில் முக்கியமானவரான தேவேந்திர வர்மா கிபி 545ல் கட்டியதாக தெரிகிறது.

  அதன்பிறகு அவருடைய வாரிசுகளில் ஒருவரான ஒன்றாம் தேவேந்திர வர்மா 648ல்  சூரிய கிரகணத்தின் போது விஷ்ணுசர்மா, பானுசர்மா  என்ற  புரோகிதர்களுக்கு அரசவல்லி கிராமத்தோடு கூட  மற்றும் சில கிராமங்களையும் தானம் அளித்ததாக ஆலய   சுற்றுப்புறங்களில் கிடைக்கும் கல்வெட்டு சாசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

  அதன் பிறகு 1077 -1150 ஆண்டுகளின் இடையில் வாழ்ந்த ஆனந்தசர்மா சோடகங்க தேவராஜா என்ற அரசர்ன் சூரியதேவன் கோவிலுக்கும் ஸ்ரீகூர்மநாதன் கோவிலுக்கும் சில பூமிதானம் செய்ததாக அரசவல்லியில் கிடைத்த சாதனங்கள் மூலம் அறியப்படுகிறது.

  1609ல் கிடைத்த கல்வெட்டு சாசனங்களின்படி அரசவல்லியில் வித்யாலய மாணவர்களுக்கு இலவச உணவு வசதியோடு கூட குளம் வெட்டி பூதானம் செய்ததாகத் தெரிகிறது. 1434ல் கிழக்கு கங்க வம்சம்  அழியும்முன்வரை ஆதித்தியனுக்கு நித்திய பூஜைகள் நடந்தன.

  அரசவல்லியில் சூரிய தேவாலயம் கட்டமைப்பு கங்க அரசர்களில் ஒருவரான தேவேந்திர வர்மா காலத்தில் நடந்தது. கலிங்க அரசர்களின் தலைநகராக ஶ்ரீமுகலிங்கம் இருந்த நாட்களில் இப்பிலி அக்கன்னா, சூரப்பா என்ற சகோதரர்கள் அரசரின் தரிசனத்திற்கு சென்று தமக்கு சூரியதேவன் கனவில் வந்து சில விவரங்களை கூறியதாக தெரிவித்தார்கள். அந்த சகோதரர்களின் தெய்வபக்தி மீது மிகவும் விசுவாசம் கொண்ட அரசன் தேவேந்திரவர்மா

  arasavilli-suryanarayana-temple
  arasavilli-suryanarayana-temple

  அவர்களை அரசவல்லி சூரியநாராயண தேவாலயத்திற்கு அர்ச்சகர்களாக  நியமித்ததாக சில இலக்கியங்கள் மூலம் தெரிகிறது. கிருஷ்ணா நதி தீரத்தைச் சேர்ந்த அந்த சகோதரர்கள் ஶ்ரீமுகலிங்கம் வந்தபோது வம்சதாரா நதியில் ஒரு ஓலைச்சுவடு கிடைத்தது. அதில் சூரியநாாராயண பூஜாவிதானங்கள் இருந்தன என்று அவர்கள் மகாராஜாவுக்கு தெரிவித்ததாக சரித்திரம் கூறுகிறது. அவர்களுடைய வாரிசுகளே இப்போதும்கூட ஆலய அர்ச்சகர்களாகத் தொடர்ந்து வருகிறார்கள். 

  கங்க வம்ச ராஜாக்களின் பிறகு கஜபதி அரசர்கள் அரசவல்லியோடு கூட வடக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள  ஆலயங்களை பாதுகாத்து மானியங்கள் அளித்தார்கள்.

  கிபி 1599 ல் ஹஸ்ரத் குலிகுதுப்ஷா என்ற நவாபு  ஸ்ரீகூர்மம் வரை படையெடுத்து அரசவல்லி கோவிலை துவம்சம் செய்ததாக சௌத் இந்தியன் இன்ஸ்கிரிப்ஷன்ஸ் ஐந்தாவது பகுதியின் ஆதாரமாகத் அறிய முடிகிறது. 16வது நூற்றாண்டில் இந்த பகுதிக்கு நிஜாம் நவாபின் சுபேதாராக வந்த ஷேர் முகமதுகான் என்பவன் தானே இந்த ஆலயத்தை துவம்சம் செய்ததாக ஒரு சாசனத்தில் கூறிக்கொள்கிறான். அவனிடம் பணிபுரிந்த சீதாராமஸ்வாமி என்ற பண்டிதர் முஹம்மது கானின் படையெடுப்பு குறித்து அறிந்து கோவிலின் மூல விக்ரகத்தை கிணற்றில் தூக்கிப்  போட்டு பாதுகாத்தார்.

  1778 ல் எலமஞ்சலி புல்லாஜி என்பவர் இந்த கிணற்றில் மூலவரைக் கண்டறிந்து வெளியில் எடுத்து துவம்சம் ஆன ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்து விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். அப்போது கருத்த பாறையால் வடிவமைத்த மூல விக்கிரகம் தவிர  வேறு ஒரு எந்த சிலையும் இல்லை. அவ்வாறு காலக்கிரமத்தில் இப்பிலி ஜோகாராஜு ஆலய தர்மகர்த்தாவாக இருந்த சமயத்தில் சாரவகோட்ட மண்டலம் ஆலுது கிராமத்தவரான  வருதுபாப்ஜி தம்பதிகள் ஆலய வாஸ்து நிர்மாணத்தைக் காப்பாற்றுவதற்காக கர்ப்பாலயத்தின் மீது விமான கோபுரத்தை உடைத்துவிட்டு தென்னிந்திய முறையில் அல்லாமல் ஓட்ரா எனப்படும் ஒரிசா சம்பிரதாயத்தில் நிர்மாணம் செய்தார்கள்.

  arasavalli-suryanarayanaswami-temple
  arasavalli-suryanarayanaswami-temple

  இந்த ஆலயத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை சூரிய கிரணங்கள் காலை வேளையிலும்  மாலை வேளையிலும் கர்ப்பாலயத்தில் உள்ள மூலவரின் பாதங்களை பாதங்களில்படும்படி கட்டியிருப்பது சிறப்பு. 

  ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பகழ்பெற்ற  ஆலயமான உஷா, பத்மினி, சாயா சமேத ஸ்ரீ சூரிய நாராயண சுவாமியை சூரிய கிரணங்கள் வந்து வருடுகின்றன. சூரியனின் முதல் கிரணங்கள் அரசவல்லி ஆலய கொடிமரத்திற்கும்  சுதர்சன கதவு துவாரத்திற்கும் இடையில் இருக்கும் மூலவிராட் ஆதித்தியனின் சிரசைத் தொடுகின்றன. 

  சூரிய கிரணங்கள் ஆதித்தியனைத் தொடும் அழகைப் பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக பக்தகோடிகள் அரசவல்லிக்கு வந்து சேர்கிறார்கள்.  

  அனைத்து உயிர்களுக்கும் நன்மையையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் சூரிய நாராயண சுவாமியின் இரண்டு கைகளும் அபய முத்திரையில் உள்ளன.  சாதாரண நாட்களோடு ஒப்பிட்டால் மாக மாசம், வைசாகம்,  கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதிலும் முக்கியமாக ரத சப்தமியன்று இந்த எண்ணிக்கை லட்சத்தை தொடும் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே.

  அதேபோல் உத்தராயண, தக்ஷிணாயன மாற்றங்களின் போதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், அக்டோபர் மாதங்களில் சில நாட்களில்  சூரியனின் முதல் கிரணங்கள் ஸ்வாமியை வந்து தொடுகின்றன. சுவாமி பாதங்கள் மீது  ஆரம்பித்து சிரம் வரை சூரிய கிரணங்கள் பரவி வரும் அற்புதமான அரிய காட்சியை  கண்டால் சகல பாவங்களும் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் கூட்டம் கூடுகிறது.

  இங்கு ரதசப்தமி மிகச் சிறப்பான விசேஷமாக பண்டிகையாக  கொண்டாடப்படுகிறது. அது தவிர சித்திரை மாதத்தில்  சுக்லபட்ச ஏகாதசி யிலிருந்து கிருஷ்ண பட்சம் பாட்யமி வரை 16 நாட்கள் கல்யாண உற்சவம் நடக்கிறது.

  மகாசிவராத்திரியன்று  ஆலயத்தின் க்ஷேத்திரபாலகரான புவனேஸ்வரீ சமேத இராமலிங்கேஸ்வர ஸ்வாமிக்கு   உற்சவம் நடக்கிறது. பிரத்யேக அபிஷேகங்கள் இரவு நடக்கின்றன. ஹோலி பண்டிகை அன்று மாலை காமதஹனம் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

  ஆலயத்தின் பிரதான மூர்த்தி சுமார் ஐந்து அடி உயரத்தோடு தாமரை இதழ்களில் ஏழு குதிரைகளோடு அருகில் பத்மினி உஷா சாயாதேவிகளோடு கொலுவீற்றிருக்கிறார். விக்கிரகத்தின் பாதங்களின் அருகில் துவாரபாலகர்களான பிங்களர், தண்டுலர்களோடு கூட  சனகர், சனந்தன ருஷிகளின்  விக்கிரகங்கள் உள்ளன. சூரிய ரதம், சூரிய கிரணங்கள் கூட இங்கு  செதுக்கப்பட்டுள்ளன.

  ஒவ்வொரு ரத சப்தமியன்றும்  சூரிய கிரணங்கள் சுவாமி பாதங்களின் மீது வந்து படுகின்றன. தற்போதுள்ள ஆலயம் ரதம் வடிவத்தில்  சக்கரங்களின் மீது நின்றிருப்பதாக கட்டியுள்ளார்கள். வெளியில்  செல்லும் மார்க்கத்தில் ஆலயத்திற்குத் தொடர்பான மூன்று கல்வெட்டுகளை பதித்துள்ளார்கள்.

  ஸ்தல புராணம்:

  கௌரவ பாண்டவ யுத்தத்தில்   நிகழவிருக்கும் உறவினர்களின் அழிவைப் பார்க்க இயலாத பலராமர் தீர்த்த யாத்திரை கிளம்பினார். விந்திய மலைகளைத் தாண்டி தண்டகாரண்யத்தில் 

  மாதவ வனத்தில் பத்மநாப மலைப் பகுதியில் தங்கி இருந்தார். அங்கு வறட்சி ஏற்பட்டதால் மிகவும் அவதிப்பட்டு வந்த கலிங்க தேச  மக்கள் அவரிடம் வந்து காக்கும்படி வேண்டிக்கொண்டனர். அவர் தன்னுடைய ஆயுதமான கலப்பையை பூமி மீது  நாட்டி  ஜலதாரை வரும்படி செய்தார். பலதேவரின் ஆயுதமான ‘ஹலம்’  என்ற நாகவளி (கலப்பை) உற்பவித்த நீர் ஆனலால் இந்த நதியை லாங்குல்ய  நதி  என்று அழைக்கிறார்கள். இந்த நதி தீரத்தில் பலராமர் ஐந்து சிறப்பான சிவாலயங்களை கட்டினார். அதில் 

  ஸ்ரீகாகுளம் பட்டணத்தில் கட்டப்பட்ட உமா ருத்ரகோட்டேஸ்வரர் சுவாமி ஆலயமும் ஒன்று. இந்த ஆலய பிரதிஷ்டையின் போது தேவதைகள்  அனைவரும் வந்து  தரிசித்து சென்றார்கள்.  அதே போல் இந்திரன் இந்த மகாலிங்கத்தை தரிசிப்பதற்கு வந்தான். அப்போது நேரம் தாண்டி விட்டது. அப்போது நந்திஸ்வரரும் ஸ்ருங்கேஸ்வரரும்  ஸ்வாமியை தரிசிப்பதற்கு இது தகுந்த சமயம் அல்ல என்று அவரிடம் விவரித்தார்கள்.

  ஆனால் இந்திரன் அவர்களோடு வாக்குவாதத்தில் இறங்கினான். அப்போது நந்தீஸ்வரருக்கு கோபம் வந்து கொம்புகளால் ஒரு ஆட்டம் ஆடினார். இந்திரன் இரண்டு பர்லாங்கு தூரத்தில் போய் விழுந்தான். இந்திரன் விழுந்த இந்த இடத்தையே இந்திர புஷ்கரிணி என்பார்கள். அப்போது இந்திரன் சர்வ சக்திகளையும் இழந்து சூரிய பகவானை பிரார்த்தித்த போது சூரியன் பிரத்யட்சமாகி நீ விழுந்த இடத்தை உன் வஜ்ராயுதத்தால் தோண்டு என்று கூறினான்.

  இந்திரனின் வஜ்ராயுதத்தால் தோண்டியபோது அங்கு சூரிய பகவானின் விக்கிரகம் கிடைத்தது. அதோடு கூட உஷா  பத்மினி சாயாதேவி விக்கிரகங்களும் கிடைத்தன என்றும் இந்திரன் ஆலயத்தை கட்டி முடித்தார் என்றும் அதுவே இன்றைய அரசவல்லி க்ஷேத்திரம் என்றும்  தலபுராணம் தெரிவிக்கிறது. அதன்பிறகு ஸ்ரீ உமா ருத்ரகோட்டேஸ்வரர் சுவாமி கோவிலை தரிசித்து கொண்டு ஜன்மம் கடைத்தேறயது என்று எண்ணி விடைபெற்றான்.

  ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் முக்கிய இடமான ஶ்ரீகாகுளத்திற்கு அனைத்து இடங்களிலும் போக்குவரத்து வசதிகள் உள்ளன. விசாகப்பட்டினத்தில் இருந்து ஒவ்வொரு அரை மணிக்கும் நான்ஸ்டாப் பஸ்கள் உள்ளன.  ஶ்ரீகாகுளத்தற்கு சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீகாகுளம் ரோடு ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கு பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூட நிற்கின்றன.

  இந்த ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மிக அதிகளவில் பஸ்கள் உள்ளன. நேராக அரசவல்லிக்குச் சென்று சேர முடியும். விமானத்தின் மூலம் ஶ்ரீகாகுளத்திற்கு 106 கிலோ மீட்டர் தூரத்தில் விசாகப்பட்டினத்தில் விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து பஸ்கள் மூலம்  ஶ்ரீகாகுளம் சென்றடைய முடியும்.

  கட்டுரை: ராஜி ரகுநாதன்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »