திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பட்டுச் சென்றன.
அரண்மனையில் நடந்த மன்னரின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்வில் தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்றனர்.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் திருவிதாங்கூர் தலைநகரைத் திருவனந்தபுரத்திற்கு மாற்றிய பின்னர் நவராத்திரி விழாவும் அங்கே மாற்றப்பட்டது. பாரம்பரியமிக்க நவராத்திரி விழாவிற்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவீதி உலாவாக திருவனந்தபுரம் வந்து நவராத்திரி விழாவில் வைத்துப் பூஜை செய்யப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு சமூக இடைவெளியுடன் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
அதைப் போலவே இந்த ஆண்டும் சுவாமி சிலைகள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நவராத்திரி பூஜை விழா வருகிற 6-ம் தேதி தொடங்கும் நிலையில் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக ஏற்கெனவே சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், சப்பரத்தில் பவனியாக பத்மநாபபுரம் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நேற்று அதிகாலையில் வேளிமலை முருகன், சப்பரத்தில் பவனியாக அரண்மனைக்கு வரும் நிகழ்வும். இதைப் போல் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி அம்மனும் பூஜைகள் செய்யப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திற்குக் கொண்டு வந்து சேர்ந்த நிகழ்வும் நடைப்பெற்றது.
அதைத் தொடர்ந்து தமிழக, கேரள கலாச்சார உணர்வுகளைப் பறைசாற்றும் பாரம்பரிய நிகழ்வான மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் நிகழ்வு அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடைபெற்றது.
உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் அஜிகுமார், கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
அவர்கள் அதனைக் கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரிடம் ஒப்படைத்தனர்.
பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முரளிதரன், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவபிரியா, கேரள எம்எல்ஏக்கள் ஹரீந்திரன், ஆன்சலன், வின்சென்ட் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாளை முன்னால் ஏந்திச் செல்ல தேவாரக்கட்டு சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் பல்லக்கில் பவனி வந்தனர்.
கொரோனா ஊரடங்கால் சரஸ்வதி யானை மீது பவனியாகச் செல்வது தவிர்க்கப்பட்டது. திருவனந்தபுரம் சாலையில் பவனியாகச் சென்ற 3 சுவாமிகளும் மாலையில் குழித்துறை மகாதேவர் கோயிலை அடைந்தனர்.
அங்கு இரவில் தங்கிவிட்டு இன்று புறப்பட்டு தமிழக, கேரள எல்லையான களியக்காவிளையை 3 சுவாமிகளும் அடைகின்றனர். அங்கு கேரள அரசு சார்பில் சுவாமி விக்ரகங்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் இன்று மாலை நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோயிலை சென்றடையும் சுவாமி விக்ரகங்கள், அங்கிருந்து இன்று இரவு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலைச் சென்றடைகின்றனர்.
பின்னர் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, கோட்டைக்ககம் நவராத்திரி கொலு மண்டபத்திலும், குமாரகோயில் முருகன் ஆரியசாலை சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்ட அம்மன் கோயிலிலும் நவராத்திரி விழாவில் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்படும்.
நவராத்திரி நிகழ்ச்சி முடிந்த பின்னர் 3 சுவாமியர்களும் வருகிற 17-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மீண்டும் பவனியாக வந்து அந்தந்தக் கோயில்களில் பூஜை செய்து அருள்பாலிப்பார்கள்.