திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தற்போது கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு இந்த ஆண்டு கோவிலில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதம் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவினையொட்டி கோவில் விசாக கொறடு மண்டபத்தில் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு கோயில் ஸ்தானிகர் பட்டர்கள் கந்தசஷ்டி காப்பு கட்டினர். தொடர்ந்து உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவினை ஒட்டி தினமும் முருகன் தெய்வானையுடன் கோவில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். தினமும் காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சண்முகர் சன்னதியில் லட்சார்ச்சனையும், யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
விழாவினையொட்டி சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானை, உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானையும் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 9ஆம் தேதி மாலை 7 மணி அளவில் கோவர்த்தனாம்பிகையிடம் சூரனை அழிக்க முருகப் பெருமான் வேல் வாங்கும் வைபவம் நடைபெறும். தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்ச்சியாக 10ஆம் தேதி முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான 21ஆம் தேதி மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனம் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவினையொட்டி மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் காப்புகட்டி ஏழு நாட்களும் தங்கியிருந்து விரதம் இருப்பார்கள்.
விழாவின் நிறைவு நாளில் தங்களது காப்புகளை கழற்றிவிட்டு வீடுகளுக்குச் செல்வார்கள் தற்போதுகொரோனா என்பதால் இந்த ஆண்டு கோவில் விழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும் கந்த சஷ்டி விழா தற்போது பக்தர்கள் கூட்டம் இன்றி குறைவான பக்தர்கள் கொண்டு விழா நடப்பது குறிப்பிடத்தக்கது.