ஆலயங்களின் புனிதம் அதிகாரிகளின் அலட்சியம்:
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
சாலை விஸ்தரிப்பு, மக்கள் நலத் திட்டங்கள், வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில் நுட்ப வளர்ச்சி இவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பது தவிர்க்க முடியாததே. அதில் ஒரு பாகமாக ரோடு நடுவிலோ, அமைக்கப் போகும் சாலைக்கு குறுக்காகவோ சில கோயில்கள் இருந்தால் அவற்றை அகற்ற நினைப்பது தவறில்லை தான். ஆனால் கோயில்களை அகற்றுவதில் வழி முறைகள் உள்ளன :-
மக்களுக்கு சௌகர்யங்களை செய்யும் பின்னணியில் அநேக கோயில்களை உடைத்தெறிந்து வருகிறார்கள் அதிகாரிகள். இரவோடு இரவாக சொல்லாமல் கொள்ளாமல் செய்யும் இந்த வேலை, அன்றைய மத வெறியர்களின் அட்டூழியங்களை நினைவு படுத்துகிறது என்பது உண்மை.
ஆனால் அந்த வேலையைச் செய்யும் முன் ஹிந்து மத அறிஞர்களான தர்மம் தெரிந்தவர்களை கலந்து பேசி, ‘இது செய்யலாமா? செய்தால், எவ்விதம் செய்ய வேண்டும்?’ என்று கேட்டு அதற்குத் தகுந்தாற்போல் செய்தால் சரியாக இருக்கும்.
ஹிந்து கோயில் நிர்மாணத்தின் பின்னால், அது எத்தனை சிறியதாக இருந்தாலும் சரி, ஒரு சாஸ்திர முறை இருக்கும். ஒரு தெய்வ விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கு யந்திரம், ஹோமம், ‘விக்ரஹ அதிவாஸம்’ எனப்படும் தெய்வ சக்தியை ஊட்டும் சடங்கு போன்ற கிரியைகளை செய்வார்கள். ஆலயத்தை மராமத்து செய்யும் போதோ, இடத்தை மாற்றி வேறொரு இடத்தில் பிரதிஷ்டை செய்யும் போதோ அந்த விக்கிரகத்தின் தெய்வ களையை மந்திர முறைப்படி கலசத்தில் ஆவாஹனம் செய்வார்கள். மீண்டும் அவற்றை பிரதிஷ்டை செய்யும் போது மீண்டும் சாஸ்திர முறைப் படி ‘புனர் நியாசம்’ செய்வார்கள்.

கோயில்களை அகற்றும் அதிகாரிகளுக்கு இந்த சாஸ்திர முறைகள் தெரியாமல் போகலாம். அவற்றின் மீது விசுவாசம் இல்லாமலும் போகலாம். ஆனால் கோயிலைக் கட்டிய பக்தர்களுக்கு அந்த சிரத்தை இருக்கும் அல்லவா? இவற்றை கவனத்தில் கொள்ளாமல் ஆலயங்களை இடித்து, விக்ரகங்களை ரோட்டோரமாக வீசி எறிவது மனிதத் தன்மை அற்ற செயல்.
இவ்வாறு செய்வதால் ‘களை நியாசத்தோடு’ உள்ள அந்த தெய்வ விக்ரகங்களில் இருக்கும் தெய்வீக சக்தி பாதிப்பு அடைகிறது; அமைதி இழந்து துக்கமடைகிறது. அது, அதனை இடித்தவர்களையும், அதற்கு காரணமானவர்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்காமல் விடாது. இது பயமுறுத்தல் அல்ல. சாஸ்திரம் கூறியிருக்கும் கிரியை – பிரதிக்கிரியை, காரியம் – எதிர் விளைவு மற்றும் அதன் பலன்கள் பற்றிய உண்மை.
எத்தனை சிறிய கோயிலானாலும் அகற்றும் முன் அதற்கு தொடர்புடையவர்களை, சாஸ்திரமறிந்தவர்களை கலந்து பேசி, அதற்கான நியாசம் முதலிய கிரியைகள் மூலம் விக்ரகங்களை பாதுகாப்பாக வேறொரு இடத்தில் பத்திரப்படுத்துவதற்கு அவகாசம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்குப் பின் சாலை விஸ்தரிப்பு வேலைகளை செய்யலாம். இல்லாவிடில் தாங்கள் பக்தி சிரத்தையோடு கட்டிய கோயில் நிலையாக நிற்பது கடினம் என்ற பாதுக்காப்பற்ற உணர்வு மக்களிடம் ஏற்படும்.
எத்தனைதான் மாற்று ஸ்தலங்களை அளித்தாலும் சில பெரிய கோயில்களை இடிப்பது தவறே. வரலாற்றுப் பூர்வமாக பிரசித்தி பெற்ற கட்டிடங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கடமை மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே யல்ல, அரசாங்கத்திற்கும் உள்ளது.
அபிவிருத்தி எத்தனை தேவையோ சரித்திரங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் கடமை கூட நாகரீக நாடுகளுக்கு அத்தனை தேவை. நூறாண்டுகள் தாண்டிய எந்த கட்டடத்தையும் சரித்திர சொத்தாக பத்திரப்படுத்தும் விதி முறைகள் மேல் நாடுகளில் உள்ளன.
நாகரீகமடைந்த குடியரசு நாடான இந்தியாவில் சரித்திரங்களை அழிப்பது மட்டுமின்றி, ஹிந்துக்களின் மீது காட்டும் விரோத நடவடிக்கையும் கவலையூட்டுவதாக உள்ளது.
நூற்றாண்டுகளுக்கு முன் துவேஷத்தோடு ஹிந்துக்களின் ஆலயங்களை துவம்சம் செய்தவர்களை பற்றி படித்துள்ளோம். அவர்களின் மதத்தைச் சேர்ந்தவர்களை அதிகாரிகளாக அமர்த்தினால், அந்த நாளைய துஷ்ட சம்பிரதாய எண்ணங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் பின் வாங்க மாட்டார்கள். அவர்களுக்கு ஹிந்து கோவில்களின் சொரூபம், சுபாவம் தெரியாதாகையால் மற்றவர்களை போல் பிரார்த்தனைக்காகவோ, கூட்டம் கூடுவதற்காகவோ தயார் செய்து கொள்ளும் நான்கு சுவர்கள் கொண்ட கட்டட நிர்மாணம் என்று நினைத்துக் கொள்ளும் ஆபத்து உள்ளது.
பிற மதத்தவர்களின் மத விஷயங்களில் தலையிடாத நம் நாட்டு நீதி மன்றங்கள், முன் பின் யோசிக்காமல் ஹிந்து ஆலயங்களின் பரம்பரைக்கும் வழி முறைக்கும் எதிராக தீர்ப்பளிக்கின்றன.
மற்றவர்களின் மத நிலையங்களை அசைக்க முடியாத போது, தேவையானால் அவர்களின் மதப் பெரியவர்களை ஒப்புக் கொள்ள வைத்து, அதிக அளவு மாற்று ஏற்பாடுகள் அளித்து கவனமாக செயல்படும் அரசாங்க அதிகாரிகள், நூற்றுக் கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பவித்திர ஹிந்து ஆலயங்களை எந்த சம்பிரதாயங்களும் இன்றியே அஸ்திவாரத்தோடு பிடுங்கி எறிகிறார்கள்.
ஹிந்து மத பெரியவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்துக்கும் விரோதிகள் அல்லர். மேலும்,அதற்கு உதவி புரியும் சாத்வீகர்கள் அவர்கள். அவர்களிடம் பிரச்னையை விவரித்துக் கூறினால், இரு பட்சத்தாருக்கும் ஏதுவாக, சாஸ்திர சம்மந்தமான பரிஷ்காரங்களோடு கூட வேறொரு இடத்திற்கு பத்திரமாக நகர்த்துவதற்கு உதவி புரிவார்கள்.
ஆயினும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான சரித்திரம் உள்ள கோயில்களை மட்டும் அகற்றாமல் வேறொரு விதத்தில் சாலை முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டுமென்ற விஷயத்தை மீண்டும் மீண்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஹிந்துக்களை மன வருத்தத்திற்கு ஆளாக்காமல் அனைவரும் ஒற்றுமையாக அமைதியாக வாழ அரசாங்க அதிகாரிகளும் மக்கள் சமுதாயமும் ஒன்று கூடி பேசி வழி வகை செய்ய வேண்டும்.



