-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐபிஎல் 2024 – 26.03.2024 – சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்
சென்னை அணி (206/5, ஷிவம் துபே 51, ருதுராஜ் 46, ரச்சிந்திரா 46, ரஷீத்கான் 2/49) குஜராத் அணியை (143/8, சாய் சுதர்ஷன் 37, சாஹா 21, தீபக் சாஹார் 2/28, முஸ்தஃபிகுர் ரஹ்மான் 2/30, துஷார் தேஷ்பாண்டே 2/21) 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே சென்னையில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். ரச்சின் (20 பந்துகளில் 46 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) முதலில் 5.2 ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் இருக்கும் வரை சுமாராக ஆடிய கெய்க்வாட் (36 பந்துகளில் 46 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), ரச்சின் ஆட்டமிழந்த பின்னர் அதிரடியாக ஆடினார். அதன்பின்னர் அஜிங்க்யா ரஹானே 12 பந்துகளில் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் ஷிவம் துபே தன்னுடைய வாணவேடிக்கைகளைத் தொடங்கினார். அவர் 23 பந்துகளில், 2 ஃபோர், 5 சிக்சருடன் 51 ரன் எடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் மூன்று விக்கட் விழுந்தபோதும் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆட வந்த குஜராத் அணியின் பேட்டிங் ஆரம்பத்திலிருந்தே சொதப்பல்தான். தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் பின்னர் சற்று வேகமாக ஆடக்கூடியவர் ஷுப்மன் கில். இன்று அவர்தான் முதலில் அவுட்டானார். விருத்திமான் சாஹா 21 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சாய் சுதர்ஷன் (37 ரன்), விஜய்ஷங்கர் (12 ரன்), டேவிட் மில்லர் (21 ரன்), ஒமர்சாய் (11 ரன்) என சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் குஜராத் அணி 18ஆவது ஓவர் முடிவில் மீதமுள்ள 12 பந்துகளில் 79 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. அதாவது எல்லா பந்துகளிலும் சிக்சர் அடித்தால் கூட வெற்றிபெற வாய்ப்பில்லாத நிலை. அந்த இரண்டு ஓவர்களிலும் குஜராத் அணி ஒரு விக்கட்டை இழந்து 15 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அனி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஹைதராபாத்தில் மும்பை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.