
ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி – 16.04.2025
சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
டெல்லி கேபிடல்ஸ் அணி (188/5, அபிஷேக் பொரல் 49, கே.எல், ராகுல் 38, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34, அக்சர் படேல் 34, அஷுதோஷ் ஷர்மா 15, ஆர்ச்சர் 2/32, மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா தலா ஒரு விக்கட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (188/4, யசஷ்வி ஜெய்ஸ்வால் 51, சஞ்சு சாம்சன் 31, நிதீஷ் ராணா 51, துருவ் ஜுரல் 26, ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 15, மிட்சல் ஸ்டார்க், அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கட்) மேட்ச் சமனில் முடிவடைந்தது. அதனால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் 0.5 ஓவரில் 11/2, டெல்லி கேபிடல்ஸ் 0.4 ஓவரில் 13/0. எனவே டெல்லி அணி வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாடவந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் மெகர்க் (9 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கருண் நாயர் (பூஜ்யம் ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வரிசையாக நான்கு வீரர்கள் சிறப்பாக ஆடினர்.
மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் போரல் (37 பந்துகளில் 49 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), கே.எல். ராகுல் (32 பந்துகளில் 38 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (18 பந்துகளில் 34 ரன்), அக்சர் படேல் (14 பந்துகளில் 34 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), அஷுதோஷ் ஷர்மா (11 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர்) என அதிரடியாக விளையாடியதால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 188 ரன் எடுத்தது.
189 ரன் என்ற வெற்றை இலக்கை அடைய இரண்டாவதாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் யசஶ்வீ ஜெய்ஸ்வால் (37 பந்துகளில் 51 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் சஞ்சு சாம்சன் (19 பந்துகளில் 31 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ரியன் பராக் 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் நிதீஷ் ராணா (28 பந்துகளில் 51 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்), துருவ் ஜுரல் (17 பந்துகளில் 26 ரன், 2 சிக்சர்), ஷிம்ரோன் ஹெட்மயர் (9 பந்துகளில் 15 ரன்) என நன்றாக ஆடினர். இருப்பினும் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 9 ரன் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியால் 8 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் ஸ்கோர் சமனில் முடிந்தது. எனவே ஆட்டம் சூப்பர் ஓவருக்குப் போனது.
சூப்பர் ஓவரில் முதலில் ராஜஸ்தான் அணி மட்டையாடியது ஷிம்ரோன் ஹெட்மயரும் ரியன் பராகும் ஆடவந்தனர். டெல்லி தரப்பில் இருந்து மிட்சல் ஸ்டார்க் பந்து வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. இரண்டாவது பந்தில் ஹெட்மயர் ஒரு ஃபோர் அடித்தார்.
மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். நாலாவது பந்து ஒரு நோபால்; அதில் பராக் ஃபோர் அடித்தார். அதனால் 5 ரன் வந்தது. அடுத்த பந்தில் ப்ராக் ரன் அவுட் ஆனார். அதற்கடுத்த பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் ஓடி ரன் அவுட் ஆனார். அதனால் ஐந்து பந்துகளில் ராஜஸ்தான் அணி 11 ரன் எடுத்தது.
டெல்லி தரப்பில் இருந்து ஸ்டப்ஸ் மற்றும் ராகுல் மட்டையாடக் களமிறங்கினர். ராஜஸ்தான் தரப்பில் இருந்து சந்தீப் ஷர்மா பந்துவீசினார். முதல் மூன்று பந்துகளில் ராகுல் 2, 4, 1 என ஏழு ரன் எடுத்தார். நாலாவது பந்தை சிக்ஸ் அடித்து ஸ்டப்ஸ் டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
டெல்லி அணியின் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.