
ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs மும்பை – ஹைதராபாத் – 23.04.2025
மீண்டும் ரோஹித் ஷர்மாவின் அதிரடி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (143/8, ஹென்றி கிளாசன் 71, அபினவ் மனோஹர் 43, அனிகேத் வர்மா 12, போல்ட் 4/26, தீபக் சாஹர் 2/12, புமரா 1/39, பாண்ட்யா 1/31) மும்பை இந்தியன்ஸ் அணி (146/3, ரோஹித் ஷர்மா 70, சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 40, வில் ஜேக்ஸ் 22, ரியன் ரிக்கிள்டன் 11, உனக்தத் 1/25, ஈஷன் மலிங்கா 1/33, சீஷன் அன்சாரி 1/36) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் நான்கு வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன்), அபிஷேக் ஷர்மா (8 ரன்), இஷான் கிஷன் (1 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (2 ரன்) இன்று மும்பை அணியின் தொடக்க பந்துவீச்சாளர்கள் ட்ரண்ட் போல்ட் மற்றும் தீபக் சாஹர் பந்துவீச்சில் விரைவில் பெவிலியன் திரும்பினர்.
4.1 ஓவர்களில் ஹைதராபாத் அணி 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 13 ரன் எடுத்திருந்தது. அந்த நிலையில் இருந்து அந்த அணியை ஹென்றி கிளாசன் (44 பந்துகளில் 71 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்), அனிகேத் வர்மா (14 பந்துகளில் 12 ரன்) மற்றும் அபினவ் மனோஹருடன் (37 பந்துகளில் 43 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) இணைந்து அணியின் ஸ்கோரை 142 ரன்னுக்குக் கொண்டுவந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது.
வெற்றிக்கு 144 ரன் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் ரியன் ரிக்கிள்டன் (8 பந்துகளில் 11 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டார்.
மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா (46 பந்துகளில் 70 ரன், 8 ஃபோர், 3 சிக்சர்) சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தைப் போல இன்றும் வெளுத்து வாங்கினார். அவர் விளையாடும்போது மும்பை அணியின் வெற்றி பத்தாவது ஓவரிலேயே உறுதியாகிவிட்டது.
அவருடன் இணைந்து வில் ஜேக்ஸ் (19 பந்துகளில் 22 ரன்) மற்றும் சூரிய குமார் யாதவ் (19 பந்துகளில் 40 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் மும்பை அணிக்கு ஐந்தாவது வெற்றியைத் தேடித்தந்தனர். மும்பை அணி 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 10 புள்ளைகள் பெற்றுள்ள பெங்களூரு, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகளைவிட ரன்ரேட் மும்பைக்கு அதிகம் உள்ளது.
மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர், இன்று நான்கு விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.






