
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி : ஐந்தாம் நாள்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (11.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு அகமதாபாத்தில் ஆஃப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் கொழும்புவில் மதியம் 0300 மணிக்கு ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தை அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 0700 மணிக்கு விளையாடுகின்றன.
இரண்டாவது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
காலை 1100 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்கிய இந்த ஆட்டம் மதியம் 1420 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது என்றால் அதற்குக் காரணம் ஆஃப்கானிஸ்தான் அணிதான். பூவாதலையா வென்ற அந்த அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மர்கரம் (5 ரன்) சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் க்விண்டன் டி காக் (59 ரன்), ரியன் ரிக்கிள்டன் (61 ரன்), டிவால்ட் ப்ரூவிஸ் (23 ரன்), டேவிட் மில்லர் (20 ரன்) ஆகியோ சிறப்பாக ஆடினர். 20 ஓவர் முடிவில் தெ ஆப்பிரிக்க அணி 6 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணியில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 3 விக்கட் எடுத்தார்.
இரண்டாவதாக ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹமத்துல்லா குர்பாஸ் (42 பந்துகளில் 84 ரன்) சிறப்பாக ஆடினார். மற்றவர்கள் அவரைப்போல ஆடவில்லை என்றாலும் 19.4 ஓவர்களில் 187 ரன் எடுத்து அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குப் போனது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி விக்கட் இழப்பின்றி 17 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய தெ. ஆ அணியும் 17 ரன் எடுத்ததால் ஆட்டம் இரண்டாவது சூப்பர் ஓவருக்குப் போனது. இரண்டாவது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் ஆடி 23 ரன் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணி 19 ரன்னுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது.
ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி
இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் மதியம் 0300 மணிக்குத் தொடங்கியது. பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. அந்த அணியின் ஜோஷ் இங்லிஷ் (37 ரன்), காம்ரூன் கிரீன் (21 ரன்), மேட் ரென்ஷா (37 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (45 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய அயர்லாந்து அணியில் ஜியார்ஜ் டூக்ரல் (41 ரன்), லோர்கன் டெக்டர் (24 ரன்), ரோஸ் அடேர் (12 ரன்), மார்க் அடேர் (12 ரன்), கேரத் டிலானி (11 ரன்) ஆகியோர் மட்டுமே இரட்டையிலக்க ஸ்கோர் அடித்தனர். இதனால் அந்த அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 115 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றிபெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகளின் பழைய ஆட்டம் திரும்புகிறதா?
மூன்றாவது ஆட்டம் இரவு 0700 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த மே.இ. தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (1 ரன்), ஷாய் ஹோப் (பூஜ்யம் ரன்) இருவரும் மோசமான தொடக்கம் தந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மயரும் 12 பந்துகளில் 23 ரன் அடித்து ஆட்டமிழந்தார். 3 விக்கட் இழப்பிற்கு 5 ரன் என்ற ஸ்கோர் கணக்கில் இருந்த மே.இ.தீவுகள் அணியை ரூதர்ஃபோர்ட் (42 பந்துகளில் 76 ரன், 7 சிக்சர்)ஜேசன் ஹோல்டர் (17 பந்துகளில் 33 ரன், 4 சிக்சர்) அபாரமாக ஆடி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 196 ரன் என்ற நிலைக்கு கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் ஆடவந்த இங்கிலாந்து அணியில் பில் சால்ஸ்ட் (30 ரன்), ஜாஸ் பட்லர் (21 ரன்), பெதல் (33 ரன்), சாம் கரன் (43 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் மே.இ. தீவுகள் அணியின் சுழப் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 166 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் மே.இ. தீவுகள் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
நாளை (12.02.20260 முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு இலங்கை ஓமன் இடையே பல்லேகலே மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இத்தாலி நேபாள் அணிகளுக்கிடையே நடைபெறும். மூன்றாவது ஆட்டம் டெல்லியில் இந்திய நமீபிய அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கு நடைபெறும்.




