
விவாகரத்தான இளம்பெண்ணை திருமணம் செய்த இளைஞர் 22 பவுன் நகை, ரூ.25 லட்சத்துடன் தப்பியோடி விட்டார். அவரை திருச்செந்தூர் மகளிர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள திருவள்ளுவர் காலனியை சேர்ந்த முருகன் மகள் சித்ரா (24). இவருக்கும், தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த உறவினர் சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் விவாகரத்தானது.
இதனால் கடந்த 2015ம் ஆண்டு முதல் சித்ரா தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே அடுத்த தெருவில் உள்ள தனது தோழி ஜேனட்டின் வீட்டுக்கு சித்ரா அடிக்கடி சென்று வந்தார். அப்போது ஜேனட்டின் அண்ணன் பிரபுவுடன் (29) சித்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது.
இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சித்ராவை அழைத்துச் சென்ற பிரபு, அங்கு வைத்து மாலை மாற்றி திருமணம் செய்தாராம். பின்னர் இருவரும் அவர்களது வீட்டிற்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்தனர். இதில் 2 முறை சித்ரா கர்ப்பமானார். அப்போது சித்ராவிடம், ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ளதால் பாசம் போய் விடும் எனக்கூறி கருக்கலைப்பு செய்தாராம்.
இதற்கிடையே பிரபுவின் தொழில் அபிவிருத்திக்காக சித்ரா, 22 பவுன் நகைகளை அடமானம் வைத்து பணம் கொடுத்துள்ளார். மேலும் அவரது தங்கை, அண்ணன், நண்பர்கள், தாயாரின் நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் பிரபுவிற்கு பணம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் சித்ராவை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய பிரபு முயற்சித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சித்ரா தற்கொலை செய்ய முயன்று சாணி பவுடர் குடித்துள்ளார்.
அப்போது பிரபுவும், அவரது தங்கையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சித்ராவை காப்பாற்றியுள்ளனர். அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனால் சித்ரா குணமாகி வீடு திரும்பிய பின்னர், உன்னோடு நடந்த திருமணம் யாருக்கும் தெரியாது. நான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். நீ கடன் வாங்கிக் கொடுத்த ரூ.25 லட்சம் பணத்தையும் தர முடியாது. நீ என்னை ஒன்றும் பண்ண முடியாது என்று மிரட்டியுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சித்ரா, கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் 22 பவுன் நகை, ரூ.25 லட்சம் பணத்தை மீட்டுத்தரவும் கோரி திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர், பிரபுவை தேடி வருகின்றனர்.



