கோவை: 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள சடையப்பர் வீதியை சேர்ந்தவர் அருண்குமார் (35). டிரைவர்.
இவருக்கும் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கும் நட்பு இருந்தது. நண்பரை சந்திக்க அருண்குமார் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். நண்பரின் 10வது படிக்கும் 16 வயது மாணவியிடம், ”நன்றாக படிக்கிறாயா, அதிக மதிப்பெண் வாங்கவேண்டும்,” என பாசமாக பேசி வந்துள்ளார். சமீபத்தில் நண்பரை காண அருண்குமார் அவர் வீட்டிற்கு சென்றார்.
அப்போது வீட்டில் யாருமில்லை. வீட்டில் மாணவி மட்டும் இருந்துள்ளார். அவரிடம் வழக்கம் போல் பாசம் காட்டி விசாரித்த அருண்குமார் மிரட்டி பாலியல் ரீதியாக டார்ச்சர் கொடுத்துள்ளார்.
அதற்கு பிறகு மாணவி பள்ளிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இவரின் அத்துமீறலால் மாணவியால் சரியாக படிக்க முடியவில்லை.
அருண்குமாரின் அத்துமீறல் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து பெற்றோர் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிறார் பாலியல் துன்புறுத்தல் பிரிவில் (போக்சோ சட்டம்) வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.