கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் லாக்டௌன் அமல்படுத்தப்பட்டு மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திவருகின்றனர். மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பல்வேறுபட்ட மக்கள் உணவுக்கும், மருந்துக்கும் சேவைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, அரசுடன் இணைந்து சில சமூக ஆர்வலர்கள் உதவி வருகின்றனர்.
இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் ட்விட்டர் பக்கத்தில் உதவி கோரி யார் பதிவு போட்டாலும், உடனடியாக அவர்களது பதிவை டேக் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி மேற்கொள்ள வழி செய்கிறார். மேலும், சம்பந்தப்பட்டவர்களின் ட்விட்டர் பதிவுக்கும் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்து வருகிறார். இதில், சில சம்பவங்கள் அவ்வப்போது கவனம் ஈர்த்து வருகின்றன.
இதற்கிடையே, இரண்டு நாள்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி.
இந்தப் பதிவுக்குக் கீழ், நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர் ரவிக்குமார் என்பவர், “ஐயா நான் மத்திய பாதுகாப்புப் படையில் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயாருக்கு 89 வயது. வீட்டில் தனியாக உள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கு தந்தையும் இல்லை; சகோதரனும் இல்லை எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை” என்று பதிவிட்டிருந்தார்.
பதிவிட்ட சில மணி நேரங்களில் ட்விட்டரில் ரவிக்குமாரை டேக் செய்து, “தங்கள் தாயாருக்குத் தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும், அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லை. நலமாக உள்ளார். நீங்கள் தைரியமாக நிம்மதியாக இருங்கள்!” என்று அவரது தாய்க்கு உதவிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள ரவிக்குமார், “நன்றி ஐயா… இப்படி ஒரு உதவியையும் ஆதரவையும் நான் எதிர்பார்க்கவே இல்லை. நன்றிகள் பல. தமிழக முதல்வருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நம்பிக்கை நிறைந்த நன்றிகள். மருத்துவக் குழு எனது தாயாரை நன்கு கவனித்துக்கொள்வதாகக் கூறினார்கள். பல அதிகாரிகள் மற்றும் நண்பர்களும் தொடர்புகொண்டார்கள்… அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி. கண்களில் கண்ணீர் வருகிறது” என்று கூறியுள்ளார்.