கரூர் அருகே உள்ள மணவாடி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், ரங்கநாதன் (வயது 35). விவசாயியான இவரின் மனைவி தீபிகா (வயது 33). இருவரும் மணவாடியில் உள்ள அவர்களது வீட்டில், நேற்று இரவு உறங்கிக்கொண்டிருந்த வேளையில், மர்ம நபர்கள் ரங்கநாதன் மற்றும் அவரின் மனைவியை சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், ரங்கநாதன், தீபிகாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு கூடியதால், அவர்களை வெட்டி மர்மநபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்தக் கொடூர கொலை சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்தில் மோப்ப நாயுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அதோடு, இந்தக் கொலைச் சம்பவம் பற்றி அறிந்த, கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், கரூர் டி.எஸ்.பி சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர்.
படுகொலை செய்யப்பட்ட ரங்கநாதன் மற்றும் தீபிகாவின் உடல்களைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து வெள்ளியணை காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ரங்கநாதனையும் அவரின் மனைவி தீபிகாவையும் வெட்டிப் படுகொலை செய்தது, ரங்கநாதனின் சித்தி ராணியும், அவரின் மூன்று மகன்களான பார்த்திபன், பிரவீன், கௌதம் ஆகியோர்தான் என்று தெரியவந்தது.
தான்தோன்றிமலை அருகே உள்ள மில்கேட் பகுதியில் உள்ள நிலத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக, ராணியும் அவரின் மகன்களும் சேர்ந்து, ரங்கநாதனையும் அவரின் மனைவியையும் கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட ரங்கநாதன், தீபிகா தம்பதியினருக்கு அக்ஷயா என்ற 4 வயது மகள் உள்ளார். அவர் வீட்டின் உள்ளே தனியறையில் உறங்கியதால் உயிர் தப்பினார் எனக் கூறப்படுகிறது. ‘சொத்து தரலைன்னா, இதுதான் கதி’ என்று ரங்கநாதனையும் தீபிகாவையும் படுகொலை செய்த கும்பல் தெரிவித்ததாகவும், ‘ஒருத்தரையும் விடக் கூடாது; குழந்தையையும் கொல்லணும்’ என்று ரங்கநாதனின் மகள் அக்ஷயாவையும் கொலை செய்ய அந்தக் கும்பல் தேடியதாகவும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியோடு தெரிவிக்கிறார்கள்.
பக்கத்தில் உள்ள மக்கள் ரங்கநாதன் வீட்டின் முன் குவிந்ததால், பயந்துகொண்டு அக்ஷயாவை அந்தக் கும்பல் தேடாமல் வீட்டை விட்டு தப்பியோடியதாகவும் சொல்கிறார்கள்.
இந்தநிலையில், வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாக ராணி மற்றும் அவரின் மூன்று மகன்களையும் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், வெட்டி கொலை செய்யப்பட்ட ரங்கநாதன், தீபிகா உடல்கள் மீது, அவர்களின் மகள் அக்ஷயா புரண்டு அழுது எழுப்பிய சம்பவம், அங்குள்ளவர்களை சோகத்தில் விம்ம வைத்தது. சொத்துப் பிரச்னைக்காக, கரூரில் நடந்துள்ள இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.