
சென்னை: தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒரேநேரத்தில் 20 புதிய திரைப்படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
50 நாட்கள் பொதுமுடக்கத்துக்குப் பிறகு போஸ்ட் புரொடெக்சன் எனப்படும் தமிழ்த் திரைப் படங்களின் இறுதி்க் கட்டப் பணிகள் மே 11-ம் தேதி தொடங்கின. இதையடுத்து கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி உள்ளிட்ட சினி ஏரியாக்களில் உள்ள டப்பிங் ஸ்டூடியோக்கள் திறக்கப்பட்டு, தொழிலாளிகள் வேலைக்குச் சென்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 22-ம் தேதியிலிருந்து தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. சில தினங்களுக்கு முன்பு தொழில்துறையினருக்கு மட்டும், நிபந்தனைகளுடன் தொழில் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து பெப்சி அமைப்பு மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் தங்கள் பணிகளை தொடங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, மே 11 முதல் இறுதிக் கட்டப் பணிகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியது. இதனால் 50 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு தமிழ் திரைப்படப் பணிகள் மே 11-ம் தேதி தொடங்கின.
தற்போது எந்தெந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறித்து பெப்சி தொழிலாளர் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதி்ல், கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்த் திரைப்படப் பணிகள் 50 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு அல்லாத மற்றப் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசு விதித்துள்ள முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி மற்றும் சமூக இடைவெளி ஆகிய நிபந்தனைகளுடன் குரல் பதிவு, படத்தொகுப்பு, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகள் 2 இடங்களில் நடைபெற்று வருகின்றன. விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படம் மற்றும் ‘ராங்கி’ படத்தின் எடிட்டிங் மற்றும் டிஐ பணிகள், ‘கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள், தர்மராஜ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் எடிட்டிங், ‘வெள்ளை யானை’ படத்தின் சவுண்ட் மிக்ஸிங் ஆகிய பணிகள் மே 11-ம் தேதியன்றே தொடங்கப்பட்டன.
மே 12-ம் தேதியாக இன்று ‘டாக்டர்’ படத்தின் எடிட்டிங், ‘சின்னதா ஒரு படம்’ படத்தின் டப்பிங், ‘மாஸ்டர்’ படத்தின் எடிட்டிங், ‘பென்குயின்’ படத்தின் டப்பிங், ‘பேய் மாமா’ படத்தின் டப்பிங், ‘பாதாம் கீர்’ படத்தின் டப்பிங், ‘ஐபிசி 376’ படத்தின் டப்பிங், மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் படத்தின் டப்பிங், ‘ரோபர்’ படத்தின் டப்பிங், ‘மாங்கல்ய தோஷம்’ தொடரின் இறுதிக்கட்டப் பணிகள், ‘சூர்ப்பனகை’ படத்தின் எடிட்டிங், ‘சுழல்’ வெப் சீரிஸ் எடிட்டிங், ‘ஐ எண்ட் எம் ஸ்டுடியோஸ்’ படத்தின் டப்பிங், ‘2nd show’ படத்தின் டப்பிங், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் வெப் சீரிஸின் இறுதிக்கட்டப் பணிகள், ‘பூமி’ படத்தின் டப்பிங், ‘கற்க கசடற’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் டப்பிங் ஆகிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன என்று பெப்சி அமைப்பு கூறியள்ளது.
இதைத் தொடர்ந்து இன்னும் ஒரு மாதங்களில் போஸ்ட் புரடெக்சன் பணிகள் முடிந்து திரைப்படங்கள், அந்தந்த தயாரிப்பாளர்கள் கைகளில் கொடுக்கப்பட்டு விடும். இதற்கு பிறகு தமிழக அரசு அனுமதியின்பேரில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்களை வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவி்க்கப்படுகிறது.
- சதானந்தன், சென்னை



