
கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையில் உள்ள தமிழக சோதனைச்சாவடிகளில், ஆய்வு செய்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர், இ-பாஸ் வாகனங்கள் சிரமமின்றி செல்ல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, தமிழக – ஆந்திர மாநில எல்லையான பர்கூர் அடுத்த காளிக்கோவில் மற்றும் கர்நாடகா எல்லையை ஒட்டிய, ஓசூர் ஜூஜூவாடி ஆகிய சோதனைச்சாவடிகளில், கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, இ-பாஸ் இருந்தால், தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஓசூர் ஜூஜூவாடி மற்றும் காளிக்கோவில் சோதனைச்சாவடியில், பிற மாநிலங்களிலிருந்து, இ-பாஸ் அனுமதியுடன் நுழையும் வாகனங்களை சரியாக சோதனை செய்து, சிரமமின்றி அனுப்பி வைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர் பிரபாகர், எஸ்.பி., பண்டிகங்காதர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதேபோல், தமிழகத்துக்குள் நுழையும் அனுமதி பெறாத வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் பயணம் செய்வோர் செல்லும், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, உரிய அனுமதி கிடைத்தால், அனுப்பி வைக்க வேண்டும் என, தாசில்தார் வெங்கடேசனுக்கு, மாவட்ட கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தினார்.