கூகுள் மேப் காரணமாக தனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாக மயிலாடு காவல்நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் ஃபேன்ஸி கடை நடத்திவருபவர் சந்திரசேகர். இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு வந்தவண்ணம் இருந்துள்ளது. சமீபத்தில் அவரது மனைவிக்கும் அவருக்குமான பிரச்சனை அதிகமாகியுள்ளது. இதனால் அவரது குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளார் சந்திரசேகர்.
இந்நிலையில் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் சந்திரசேகர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கூகுள் மேப் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், கூகுள் மேப் தான் செல்லாத இடங்களுக்கு எல்லாம் சென்றதாக காண்பிப்பதாகவும் அதனால் தன் மனைவிக்கும் தனக்கும் இடையே பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் அங்கு செல்லவில்லை என்று கூறினாலும் கூகுள் மேப்பை மட்டுமே நம்பிக்கொண்டு தன்னிடம் சண்டையிடுவதாகவும் இதனால் தன்னுடைய குடும்பமே சிதைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மனுவை பார்த்த காவலர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவெடுத்துள்ளது மயிலாடுதுறை காவல்துறை. கவுன்சிலிங்கிற்கு பிறகும் பிரச்சனை சரியாகாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.