
கொரோனா காலத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியரின் மத ரீதியான பாரபட்ச செயல்பாட்டைக் கண்டித்து, இந்து முன்னணி புகார் மனு அனுப்பியுள்ளது.
மதரீதியாக பாரபட்சமாக செயல்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது இந்துமுன்னணி புகார் கூறியுள்ளது. முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு இந்துமுன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் புகார் மனு அனுப்பியுள்ளார். இது குறித்து, தமிழக ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரிடமும் புகார் செய்ய முடிவு செய்துள்ளனர்.

குற்றாலநாதன் எழுதியுள்ள புகார் மனு…
நான், இந்து முன்னணியின் மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் கூழ் காய்ச்சி ஊற்ற அனுமதி வேண்டி அனைத்து வட்டாட்சியர்கள் இடத்திலும் இந்து முன்னணி சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எந்த மக்களுக்கும் அரசின் சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் களக்காடு விஜயராகவபுரம் பள்ளிவாசலில் ஜமாஅத் செயலாளர் மே 12 அன்று கஞ்சி காய்ச்சி ஊற்ற அனுமதி கேட்டு அதற்கு மறுநாளே மே 13 அன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிவாசலுக்கு வழங்கியது போல் கோவில்களிலும் கூழ் காய்ச்சி ஊற்ற அனுமதி வேண்டி மே 19 அன்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருக்கோவில் பக்தர்கள் அவர்களது பகுதியில் கூழ் காய்ச்சி பொது மக்களுக்கு விநியோகிக்க தனித்தனியாக மனு அளிக்க வந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைய விடாமல் தடுத்து ஊரடங்கு காரணமாக மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெறுவதில்லை; கொரோனா பரவல் காரணமாக யாரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல் கேட் வாசலில் நிறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிரஸ்தாரை அனுப்பி அவர் மூலமாக மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றார்.
இது தொடர்பாக என் மீதும் மற்றும் 46 நபர்கள் மீதும் பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற எண் 605/2020 sec 3 of ED Act and 188, 269 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதற்கு ஒரு நாள் கழித்து மே 21 அன்று ரம்ஜான் தொழுகைக்கு அனுமதி வேண்டி ஒரே ஒரு மனுவுக்கு இஸ்லாமிய வழிபாட்டு தலத்தைச் சேர்ந்த சுமார் ஒன்பது பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
தனித்தனி மனுவுக்கு ஒரு நபரை அனுமதிக்க மறுத்த நிலையில் ஒரு மனுவிற்கு 9 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கு மேல் பொது இடத்தில் கூட அனுமதி இல்லாத கொரோனா காலத்தில் ஒன்பது பேர் சமூக இடைவெளி இன்றி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று புகைப்படமும் எடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்து கோயில்களுக்கு கூழ் காய்ச்சி ஊற்ற அனுமதி வழங்காத மாவட்ட ஆட்சியர் பள்ளிவாசலுக்கு கஞ்சி காய்ச்ச அனுமதி வழங்கியுள்ளார்! இந்து கோவில் நிர்வாகிகளை வாசலில் நிறுத்தி மனு வாங்கிவிட்டு இஸ்லாமிய நிர்வாகிகளை மட்டும் அலுவலகத்திற்குள் அனுமதித்துள்ளது பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.

நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல தகுதியற்றவர்கள் ஆகி போனோமா? இது எங்கள் மீது பூசப்பட்ட மதரீதியான தீண்டாமை போல கருதத் தோன்றுகிறது.
எல்லோருக்கும் பொதுவாக நடுநிலையாக செயல்படவேண்டிய மாவட்ட ஆட்சியர் நடுநிலை தவறி பாரபட்சமாக செயல்பட்டுள்ளா.ர் எனவே பாரபட்சமாக செயல்படும் மாவட்ட ஆட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்… என்று அந்த மனுவில் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார்.



