
சென்னை அரசு பொது மருத்துவமனையில் தலைமைச் செவிலியராகவும், செவிலியர் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வந்தவர் ஜோன் மேரி பிரிசில்லா. கடந்த மார்ச் மாதத்துடன் இவர் ஓய்வுபெற இருந்தநிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை வார்டை கண்காணிக்கும் பணியில் இருந்த இவருக்கு கடந்த 24-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, தலைமைச் செவிலியர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் என்று தகவல் பரவியது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, தலைமைச் செவிலியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை. 2 முறை செய்யப்பட்ட பரிசோதனையில், அவருக்கு வைரஸ் தொற்று இல்லை (நெகட்டிவ்) என்றே வந்துள்ளது. அவருக்கு அதிகப்படியான சர்க்கரை நோய் இருந்தது என்று தெரிவித்தனர்.
ஆனால், தலைமைச் செவிலியரின் மருத்துவக் குறிப்பேட்டில் கொரோனா வைரஸ் என எழுதப்பட்டிருப்பதாகவும், அவருக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், தலைமைச் செவிலியரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டாக்டர் உயிரிழப்பு
சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர் டாக்டர் அப்ரோஸ் பாஷா (யுனானி மருத்துவம்). திருவல்லிக்கேணியில் வசித்து வந்த அவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமா என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை (நெகட்டிவ்) என்று வந்ததாகவும், அதிகப்படியான நுரையீரல் பாதிப்பே இறப்புக்கு காரணம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.