விருதுநகர் மாவட்டத்தில் 61 வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் எண்ணப்படுகின்றன. கொரோனா பரவல் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அந்த வகையில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டது.
எனவே, தமிழக முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரியின் கண்காணிப்பில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படி நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் வாக்குபதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் ஊழியர்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள், பத்திரிகையாளர்கள் என 2,527 பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் 22 பேருக்கும், தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள் 3 பேருக்கும், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 61 பேர் என மொத்தம் 92 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.