spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்நீட் அஸ்திரம் இனிமேல் செல்லுபடியாகாது!: டாக்டர் கிருஷ்ணசாமி விளாசல்!

நீட் அஸ்திரம் இனிமேல் செல்லுபடியாகாது!: டாக்டர் கிருஷ்ணசாமி விளாசல்!

- Advertisement -

நீட் அஸ்திரம் இனிமேல் செல்லுபடியாகாது! ஆளுநருடனான தேவையற்ற மோதல் போக்கைக் கைவிடுங்கள்!!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய, நீட் தேர்வு இரத்து குறித்த தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருக்கே திருப்பி அனுப்பிவிடப்பட்டதாக, இன்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமூகநீதிக் கொம்பர்கள், ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களை மார்தட்டிக் கொள்ளும் திராவிட ஸ்டாகிஸ்ட்டுகள், 1-ஆம் தேதியே ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த மசோதா குறித்து ஏன் வாய்திறக்கவில்லை என்றுத் தெரியவில்லை.

இவர்களிடத்திலே வெளிப்படைத் தன்மை உண்மையிலேயே இருந்திருக்குமேயானால், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த நீட் மசோதா குறித்து தமிழக மக்களுக்கு அன்றே இவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். 24 மணி நேரமும் சட்டமன்றம், மக்கள்மன்றம் என்று வாய்கிழியப் பேசும் இவர்கள், சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து வெளியில் சொல்ல வெக்கப்படுவது ஏன்?

இதில் கூட ஆளுநர் ஜனநாயகப் பூர்வமாகவே நடந்திருக்கிறார். அரசியல் காரணங்களுக்காக வெளியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் ஆகியவற்றை ஆளுநர் அவசரகோலத்தில் பரிசீலனை செய்ய இயலாது. அதன் காரணமாகவே 5 மாதங்களுக்கும் மேலாக அவர் கால அவகாசம் எடுத்திருக்கிறார். அவர் அந்த மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கு விரிவான விளக்கத்தைக் கொடுத்திருப்பார் என நம்பலாம். ஆனால், செய்திக் குறிப்பில் இரண்டு முக்கியமான காரணங்களை மட்டும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஒன்று, இன்றைய ஆட்சியாளர்கள் சொல்வதைப் போல, நீட் தேர்வால் சமூகநீதிக்கு எந்தவிதமான குந்தகமும் வந்துவிடவில்லை; மாறாக, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் உண்மையிலேயே பெரிதும் பயன்பெற்றிருக்கிறார்கள் என்பதையும், இரண்டாவதாக, சமூகநீதி குறித்து வேலூர் கிறித்துவக் கல்லூரி எழுப்பிய பிரச்சனைக்கு, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டது தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக தொடர்ந்து இதில் வீண் வம்பு செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களுக்கும் ஆளுநரும் ஜனாதிபதியும் ஒப்புதல் அளிக்க வேண்டுமென இவர்கள் கருதுவார்களேயானால், 1974-ஆம் ஆண்டு இதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர்கள் ஆட்சியில் ‘மாநில சுயாட்சி’ குறித்து நிறைவேற்றிய தீர்மானத்தின் கதி என்ன? கடந்த 47 ஆண்டுகாலத்தில் அதை நிறைவேற்றுவதற்கு இவர்கள் எடுத்த முயற்சி என்ன என்பதை இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த 9 மாதகால ஆட்சியில் இவர்கள் எந்தவிதமான சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்துமே பொய்யும் புரட்டும் ஏமாற்றும் பித்தலாட்டமும் ஆகும். ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கலுக்குக் கொடுத்த 21 பொருட்களில் கூட மிகப்பெரிய ஊழல் என்று நாட்டு மக்களிடம் பரவிய செய்தியை, சிறிதும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

பொங்கல் பொருட்கள் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகளை மூடி மறைத்து, எப்படியாவது நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் முக்கியப் பதவிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுடைய இயலாமையை ஆளுநர் மீதும் மத்திய அரசின் மீதும் திருப்பிவிடக்கூடிய முயற்சியே கடந்த 2, 3 தினங்களாக தமிழகத்திலும் இந்திய நாடாளுமன்றத்திலும் இவர்கள் நடத்தக்கூடிய கூத்துகளின் வெளிப்பாடு ஆகும்.

பரந்துபட்ட பாரத தேசத்தில், ஒரு மாநில அரசின் அதிகார வரம்பின் எல்லை என்ன என்பதை உணர்ந்திருந்தும், தொடர்ந்து நீட் தேர்வை மையமாக வைத்து அரசியல் செய்வது ஓர் அரசியல் கட்சிக்கு அழகல்ல. இனிமேலாவது திமுக தனது இயலாமையை முழுமையாக ஒப்புக்கொண்டு, தமிழகப் பாடத்திட்டத்திலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்; மாணவர்களையும் அதை எதிர்கொள்ளத் தயார் செய்திட வேண்டும். இவர்கள் போட்ட தூபத்தால், ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய இன்னுயிரை நீத்ததாக இவர்களே சொல்கிறார்கள்.

அரசியல் இலாபத்திற்காக எந்தப் பாவத்திற்கும் பழிக்கும் இவர்கள் அஞ்சியதில்லை தான். ஆனால், நடைபெற வாய்ப்பு இல்லாத ஒன்றை திருப்பித் திருப்பி ஏழை. எளிய மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து தவறான நம்பிக்கையூட்டுவது மிகப்பெரிய குற்றம் ஆகும். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அதே மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினாலும் சரி, புதிதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினாலும் மீண்டும் இதே நிலைதான். தமிழகத்திற்கு நீட் விலக்கு என்பது இயலவே இயலாத காரியம்; அது முடிந்து போன விசயம்.

ஆளுநர் அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் பிரதிநிதி. எந்த நீதிபதிகளையும் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதில்லை. பல அம்சங்களினுடைய அடிப்படையில் மட்டுமே நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். அது உயர்நீதிமன்றமானாலும் சரி, உச்சநீதிமன்றமானாலும் சரி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் கூட ஆளுநர்களாலும் ஜனாதிபதியாலும் நியமிக்கப்படுகிற நீதிபதிகளின் உத்தரவுகள், தீர்ப்புகள் கட்டுப்படுத்துகின்றன. மாநில அரசு மக்கள் வாக்களிப்பின் மூலம் உருவாகிறது. ஆளுநர் இந்திய அரசியல் சாசனத்தின் தலைவரான குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.

பதவிகளில் அமர்வதில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இந்திய அரசியல் சாசனமே ஆளுநருக்கும் அதிகாரத்தை வழங்குகிறது, மாநில அரசுக்கும் வழங்குகிறது. இப்பொழுது தமிழ்நாட்டின் 8 கோடி மக்களுடைய நலன் பாதுகாக்கப்பட வேண்டும். ஆளுநரோடு மோதல் போக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அது அரசு இயந்திரத்தை முற்றாக முடக்கிப் போடக் கூடும். அதிகாரிகள், அமைச்சர்கள், முதலமைச்சர் என அனைவரது நடவடிக்கைகளும் கிரீஷ் இல்லாத வண்டியைப் போல ஜாம் ஆகும்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் தான் நிறைவாகி இருக்கின்றன; இன்னும் இந்த ஆட்சிக்கு மக்கள் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை. அதற்குள்ளாக இவர் அகலக் காலை நீட்டுவதாகவே தெரிகிறது. சில உதிரிகள் வாட்சப்பிலும் முகநூலிலும் பதிவிடக்கூடிய வார்த்தைகள் முதலமைச்சருக்கு ஏற்றுகின்ற போதைக்கு அவர் மதிமயங்கிவிடக் கூடாது. அரசு என்பது வேறு, கட்சி என்பது வேறு; எதிர்க்கட்சியாக இருந்தபோது எதை வேண்டுமென்றாலும் பேசியிருக்கலாம். ஆனால் இப்பொழுது அது இயலாது. சட்டத்தின் வரையறைக்குள் இருந்துகொண்டு தான் செயல்பட முடியும்.

ஸ்டாலின் அவர்களே, உங்களுடைய நீட் அஸ்திரம் இனிமேல் செல்லுபடியாகாது!

ஆளுநருடனான தேவையற்ற மோதல் போக்கைக் கைவிடுங்கள்!!

எஞ்சியுள்ள 4 ஆண்டுகளுக்கு ஆட்சியை ஆடாமல் அசையாமல் கொண்டு செல்வதற்குக் கவனம் செலுத்துங்கள்!

எச்சரிக்கை செய்கிறோம்!!

  • டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,

நிறுவனர் – தலைவர், புதிய தமிழகம் கட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe