
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒன்பது ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, அரசின் சாதனைகளைக் கொண்டு செல்லும் அதே நேரம், தமிழக பாஜக., தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பல வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகம் உட்பட நம் நாட்டில், பல மாநிலங்களில் தொழில் தொடக்கி வருகின்றன.
அண்மையில், தமிழக பாஜக., மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் நகருக்குச் சென்றிருந்த போது பல்வேறு முன்னணி நிறுவனங்களில் உயர்பொறுப்புகளில் இருப்பவர்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது பேசப்பட்ட விஷயங்களின் படி உதித்த எண்ணம்தான் அடுத்து செயல்வடிவாக்கம் பெறவுள்ளதாம்.
தமிழகத்தில் இன்ஜினியரிங் உட்பட பல லட்சம் பட்டதாரிகள் சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். அப்படிப்பட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக., களம் இறங்கியுள்ளது. அதன்படி, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்க, மோட்டார் வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட தனியார் துறையில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.