
83 வயது முதியவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்களை நள்ளிரவில் கைது செய்ததை கண்டிக்கிறோம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழக அரசின் எண்ணப்படி தொடர்ந்து தமிழக காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை நீதிமன்றமோ, ஊடகமோ கண்டுகொள்ளவில்லை. இது ஜனநாயக படுகொலைக்கு சமம்.
திரு. RBVS மணியன் அவர்கள் தேசியவாதி. ஆன்மீகச் சொற்பொழிவாளர். இன்று குமரியில் நாம் காண்கின்ற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பணிக்காக தான் பார்த்துவந்த அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். விவேகானந்தர் நினைவு மண்டபம் உலகப் புகழ் பெற்றதாக விளங்குவதற்கும், குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாய் விளங்குவதற்கும் அந்தக் காலத்தில் திரு. ஏக்நாத் ரானடே அவரகளுடன் தோளோடு தோள் நின்று
அடிப்படை அஸ்திவாரமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.
தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்தை காக்க வாழ்ந்தவர்.
இந்நிலையில் திரு. ஆர்.பி.வி.எஸ் மணியன் அவர்கள் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி பதட்டத்தை சிலர் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர். இந்தப் போக்கை கடந்த சில வருடங்களாகவே பார்க்கிறோம். எது உண்மை எது பொய் என்பதைக்கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவாறு அவை பரப்பப் படுகின்றன.
அவர் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும் அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்துக்களின் நம்பிக்கைளை கொச்சைபடுத்திய பல யுடீயூப் சேனல்கள் , சனாதனத்தை இழிவு படுத்தி பேசிய அமைச்சர்கள், இந்துமதததை இழிவு படுத்தியவர்கள், மாண்புமிகு பிரதமர், மேதகு ஆளுநர் ஆகியோரைத் தாக்கிப் பேசியவர்கள் என பலர் மீது பல இடங்களில் புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழக காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் குற்றத்தின் தன்மையைவிட குற்றம் சாட்டப்படுபவர் பின்புலம் என்ன என்பதை வைத்துதான் நடவடிக்கை என்பதாக அமைந்துள்ளது.
ஆளும்கட்சியினரின் கண் அசைவே இந்திய குற்றவியல் சட்டமாக கருதப்படுகிறதா? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் எழுகிறது.
தொடர்ந்து சாதி வன்மத்தை இந்து விரோத தேச விரோத கருத்துக்கள் திட்டமிட்டு பதிவு செய்து வெளியிட படுகின்றன. அப்படிப்பட்டவர்களிடம் காவல்துறை விசாரணை கூட செய்ய தயங்குகிறது.
சமீப காலமாக சாதிய வன்முறை பேச்சுகளும், அநாகரிகமான செயல்களும் அரங்கேறி வருகிறது. ஆனால் சாதி சச்சரவுகளை தூண்டுவோரை கண்டு பிடித்து தண்டிக்கப்படுகிறார்களா? என்பதை ஊடகங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றோம்.
தமிழக முதல்வர் அவர்கள், ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்களின் வயது, உடல்நிலை, குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கைது நடவடிக்கயை தவிர்க்க காவல்துறைக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் வன்மத்தை தூண்ட சமூக ஊடகங்களில் எடிட் செய்து வெளிப்படும் விடீயோ ஆடியோக்களை தடுக்க தமிழக நுண்ணறிவு பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜனநாயக ரீதியில் கருத்து உரிமை மதிக்கப்பட வேண்டும்.
எனவே ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்களை விடுதலை செய்ய இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.