சென்னை: விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகக் கூறினார் நடிகர் கருணாகரன்! ஆனால் அவரை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருக்கனும். அப்போ தான் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என ஒரு வசனத்தைக் கூறினார்.
இது குறித்து தனது சமூக வலை தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் கருணாகரன், “இந்த அட்வைஸ் மற்றவர்களுக்கு தானா. உங்கள் ரசிகர்களுக்கு இல்லையா” என கேள்வி எழுப்பினார்.
அவ்வளவுதான்! விஜய் ரசிகர்கள், கருணாகரனை ஒரு பிடி பிடித்து விட்டனர். இதனால் கோபம் அடைந்த கருணாகரன், தனது கருத்துக்களையும் தொடர்ந்து தெரிவிக்க வார்த்தை மோதல்கள் அதிகரித்தன. விஜய் ரசிகர்கள் கருணாகரனை தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு செய்துள்ளார்.
இன்று பிற்பகல் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளிப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்தார்.
ஆனால், அவரிடம் எழுத்துப்பூர்வமான புகார் இல்லை. ஆகவே அதிகாரிகள், “எழுத்துப் பூர்வமாக புகார் எழுதி வாருங்கள். மேலும் எந்தெந்த எண்களில் இருந்து மிரட்டல் வந்தது என்பதையும் குறிப்பிட்டு எடுத்து வாருங்கள்” என்று சொல்லி திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து தகுந்த ஆதாரங்களோடு திரும்ப வந்து புகார் அளிப்பதாகக் கூறி நடிகர் கருணாகரன் திரும்பிச் சென்றார்.




