
இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் கேபிள் மற்றும் ஒலிபரப்பு சேவைகளுக்காகப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது.
இப்புதிய அறிவிப்பின் மூலம் டிடிஎச், கேபிள் கட்டணங்கள் தற்போதைய அளவை விடவும் சுமார் 14 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மக்களுக்குப் பெரிய அளவிலான நன்மையைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் கேபிள் மற்றும் ஒலிபரப்பு சேவைகளுக்காகப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்களை அறிவித்தது.

இப்புதிய மாற்றத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டணங்களை விடவும் குறைவான கட்டணத்தில் அதிகச் சேனல்களை டிடிஎச், கேபிள் வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும்.
இதுமட்டும் அல்லாமல் தற்போது இருக்கும் கட்டண அளவை விடவும் சுமாப் 14 சதவீதம் வரை சரிந்து புதிய கட்டணங்களை டிராய் அறிவித்துள்ளது.
அனைத்து இலவச சேனல்களையும் பார்க்க மாதம் 160 ரூபாய் நிலையான கட்டணமாக அறிவித்துள்ளது டிராய். அதுபோல 200 சேனல்களைப் பார்க்கும் திட்டத்திற்கு அதிகப்படியான Network Capacity Fee அடிப்படையில் 130 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
14 சதவீதம் வரையிலான கட்டணம் குறைக்கப்பட்டது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களைத் தாமே தேர்வு செய்து கண்டு மகிழும் வசதி இருப்பதால் சமானிய மக்களுக்கு இது டபுள் கொண்டாட்டம்.
மேலும் சில முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுச் சேனல்களுக்கு மக்கள் அதிகக் கட்டணத்தைக் கொடுக்க வேண்டிய நிலை தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையையும் மாற்ற டிராய் திட்டமிட்டும் தொடர்ந்து இதுகுறித்து ஆலோசனை செய்தும் வருகிறது.

இந்நிலையில் தற்போது டிராய் குறைக்கப்பட்டு உள்ள கட்டணத்தைத் தொடர்ந்து முன்னணி பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுச் சேனல்கள் தனது கட்டணத்தை மாதத்திற்கு 19 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அடுத்தச் சில மாதங்கள் அல்லது வருடங்களில் இந்தியா முழுவதும் இண்டர்நெட் டிவி தான் ஆதிக்கம் செலுத்தப் போகிறது.
அப்போது டிடிஎச், கேபிள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறையும். இக்காலகட்டத்தில் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளக் கட்டணங்களை அதிகளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



