
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
82. யாரிடம் இறைஞ்சுவது?
ஸ்லோகம்:
ரே ரே சாதக! சாவதானமனசா மித்ர! க்ஷணம் ஸ்ரூயதாம்
அம்போதா பஹவோ வசந்தி ககனே சர்வே௨பி நைதாத்ருசா: !
கேசித் வ்ருஷ்டிபி: ஆர்த்ரயந்தி வசுதாம் கர்ஜந்தி கேசித் வ்ருதா
யம் யம் பஸ்யசி தஸ்ய தஸ்ய புரத: மா ப்ரூஹி தீனம் வச : !!
பொருள்:
ஓ சாதகப் பறவையே! என் அன்புத் தோழா! பொறுமையாக ஒரு கணம் என் பேச்சைக் கேள்! வானில் எத்தனையோ மேகங்கள் உள்ளன. அனைத்தும் ஒன்று போலவே இருக்காது. சில மேகங்கள் மட்டுமே நீரைப் பொழிந்து பூமியை நனைக்கும். சில மேகங்கள் வீணாக உறுமிக் கொண்டிருக்கும். அவற்றின் இயல்பைத் தெரிந்து கொள்ளாமல் அனைத்திடமும் நீ தீனக்குரலில் கெஞ்சாதே!
விளக்கம்:
சாதகப்பறவை மேகத்தில் இருந்து விழும் மழை நீரை மட்டுமே நேராக அருந்தும். இதனை மழைக் குயில் என்றும் கூறுவர். இந்த சாதகப் பறவையைக் காட்டி அற்புதமான பரிந்துரை கூறும் சுலோகம் இது.
அனைவரிடமும் எதிர்பார்த்துக் கெஞ்சாதே! பரோபகார குணம் உள்ளவர்களிடம் கையேந்து! கருமியின் முன் கை நீட்டுவது வீண் என்ற செய்தியை அளிக்கிறார் கவி.
கேட்ட உடனே உதவி செய்பவர் மிக அரிதாகவே காணப்படுவர். அனைவரும் கொடையாளிகளாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் எத்தனை பரிதாபமாக வேண்டினாலும் ஒரு பருக்கை சோறு கூட போட மாட்டார்கள். கருமி யார்? தானசீலர் யார் என்று அறிந்து யாசிக்க வேண்டும். வெறும் பேச்சு வீணர்களிடமும் எரிந்து விழுந்து விரட்டுபவர்களிடமும் கேட்டு என்ன பயன்?
சாதகப்பறவைக்கு அளித்த செய்தியில் நமக்குப் பாடங்கள் உள்ளன. மானுடனைக் கெஞ்சுவதை விட பகவானிடம் பிரார்த்தனை செய்தால் பலன் உண்டு என்ற கருத்து இதில் உள்ளது.