
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
98. ஆரோக்கியமானவர் யார்?
ஸ்லோகம்:
சமதோஷ: சமாக்னிஸ்ச சமதாதுமலக்ரிய: !
ப்ரசன்னாத்மேந்த்ரியமனா: ஸ்வஸ்த இத்யபிதீயதே !!
– சுஷ்ருத சம்ஹிதை
பொருள்:
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலை, சமமான அக்னி வெப்பம் (பசி எடுப்பது, உண்ட உணவு செரிப்பது), சமமான தாதுக்கள் ( ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களும் ஏற்றத்தாழ்வின்றி சம நிலையில் இருப்பது), சரியான அளவில் மலம், சிறுநீர் வெளியேற்றம், இவற்றோடு கூட பிரசாந்தமான மனம், ஆத்மா, புலன்கள் கொண்டவனே ஆரோக்கியமான மனிதன்.
விளக்கம்:
ஆரோக்கியமானவர் யார் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சுஸ்ருத சம்ஹிதை அளித்துள்ள இந்த விளக்கம் நவீன மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்துகிறது.
மனிதத் தலை மிகச் சிக்கலானது. பல நோய்களுக்கு மூலஸ்தானம். அதனை அறிந்த ரிஷிகள் புலன்கள், மனம், ஆத்மா இவற்றை பிரசாந்தமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்கள். அப்படி வைத்துக் கொள்பவரே ஆரோக்கியமானவர் என்று கூறி அவற்றை எவ்வாறு பிரசாந்தமாக வைத்துக் கொள்வது என்பதை தெரிவிக்கும் யோக சூத்திரங்களை அளித்துள்ளார்கள்.
தோஷங்கள், தாதுக்களின் குறைபாடுகள், பிற உடல் பிரச்சனைகள் இவற்றின் நிவாரணத்திற்கு ஔஷதங்களைக் கூறியுள்ளார்கள்.
புலன்களை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு ஞானம் அவசியம் தேவை. புலனின்பத்தின் பின்னால் மனம் ஓடாமல் காப்பது ஞானம். நல்லதையே பேசி, நல்லதையே நினைத்து, நல்லதையே கேட்டு, கேட்டதை நினைவில் நிறுத்துவது போன்றவை புலன்களுக்கு யோகப்பயிற்சி.
மனத் திருப்தியே மனதுக்கு கிடைக்கும் ஔஷதம். இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது, இல்லாதவற்றுக்காக ஏங்காதிருப்பது ஆறாவது புலனான மனதுக்கு மருந்து போன்றது.
இவ்விதமாக உடல், மன ஆரோக்கியத்தை விளக்கிய நம் ரிஷிகளின் திறமை அசாதாரணமானது. அத்தகைய ரிஷிகளின் வாரிசுகள் நாம்.
வெறும் உடல் ஆரோக்கியத்தை மட்டும் கவனத்தில் கொண்டு முதலில் மருந்தளித்த நவீன மருத்துவர்கள் தற்போது மனதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் ஆத்மா பற்றிய ஞானம் அவர்களுக்குப் புரிபடவில்லை.