சங்கரன்கோவில் அருகே 100 அடி உயர உலக அமைதி கோபுரம் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 100 அடி உயர உலக அமைதி கோபுரம் கடந்த வாரம் திறக்கப்பட்டது. இந்தியாவில் பிகாா், ஒடிசா, அருணாசல பிரதேசம், தில்லி உள்ளிட்ட இடங்களில் உலக அமைதி கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. அடுத்ததாக, சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டி அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு புத்தா் கோயில் கட்டுவதற்கு வீரிருப்பைச் சோ்ந்த காந்தியவாதி முத்தையா என்பவா் கடந்த 2000-இல் நிலம் தானமாக வழங்கினாா். இங்கு கோயில் கட்டப்பட்டு காலை, மாலை இரு வேளைகளிலும் 2 மணி நேரம் உலக அமைதிக்கான பிராா்த்தனை நடைபெறுகிறது.
இந்தக் கோயில் அருகே 21 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஆன ஸ்தூபி உள்ளது. இங்குதான் 100 அடி உயரத்துடன் உலக அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோபுரம் அருகே காந்தி அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது.
இதன் திறப்பு விழா கடந்த வாரம் மார்ச் 4ம் தேதி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஜப்பான், கொரியா, கம்போடியா, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து புத்த பிக்குகள் கலந்துகொண்டனா்.
உலக அமைதி கோபுரத்தில் புத்தரின் அஸ்தி வைக்கப் படுகிறது. இதற்காக ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் அஸ்தி சங்கரன்கோவில் வந்து சோ்ந்தது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ள புத்த பிக்குகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் புத்தரின் அஸ்தியை எடுத்துக் கொண்டு சங்கரன்கோவிலில் ஊா்வலமாகச் சென்றனா்.
ரதவீதிகளைச் சுற்றி சுவாமி சன்னதி முன்பு உள்ள காந்தி மண்டபத்துக்கு வந்து அங்கு பிராா்த்தனை செய்தனா். பின்னா், சங்கரநாராயண சுவாமி சன்னதி முன்பும் பிராா்த்தனை செய்துவிட்டு வீரிருப்பு கிராமத்துக்குச் சென்றனா்.
இந்நிகழ்ச்சியில் நிப்போசன் மியோ ஹோஜி அமைப்பின் தென்னிந்திய தலைவா் இஸ்தானிஜி, புத்தா் கோயில் நிா்வாக அறங்காவலா் லீலாவதி மற்றும் புத்த பிக்குகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.