spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசுற்றுலாநம்ம ஊரு சுற்றுலா: இங்கேயும் அழகான பரசுராமர் தரிசனம்!

நம்ம ஊரு சுற்றுலா: இங்கேயும் அழகான பரசுராமர் தரிசனம்!

- Advertisement -
periyapalayam bavani amman temple

பெரியபாளையம் ஆலயத்தில் பரசுராமர் சந்நிதி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பரசுராமருக்கு ஒரு தனி சன்னதி (சன்னிதி அல்லது சந்நிதி எனவும் எழுதலாம்) உள்ளது. இங்கே ஆண்களும் பெண்களும் வேப்பிலை ஆடை தரித்து கோவிலை வலம் வந்து வழிபடுகிறார்கள். இதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு. அதுதான் ரேணுகா தேவி கதை.

          பரசுராமர் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேதோ யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி – ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். தன் தந்தை ஜமதக்கினி முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரிய அருச்சுனனை கொன்றவர். மேலும் சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டவர்.

தாயின் சிரம் கொய்த பரசுராமர்

          பரசுராமரின் தாய் ரேணுகாதேவி அதிகாலையில் எழுந்து கங்கையில் நீராடி நீரில் விரலால் வட்டம் வரைவாள். அப்போது நீர்க் குடமொன்று மேலே வரும். அதைக் கொண்டு, நீர் முகந்து வந்து கணவரின் பூஜைக்கு வழங்குவாள். இப்படி ஒவ்வொரு தினமும் செய்து வந்தாள். ஒருநாள் நீரில் வட்டம் வரைய அப்போது வானில் பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனின் அழகிய முகமும் உடலும் நீரில் தெரிந்தது. அதைக் கண்டவள் லேசாக மதி மயங்கினாள். இதனால் நீர்க்குடம் வரவே இல்லை. மனதில் சின்ன சலனம் வந்துவிட்டாலும் அவ்வளவுதான் புத்தியில் உள்ள தெளிவும் ஞானமும் கூட மங்கிப் போய்விடும்.

          தன்னுடைய தவ வலிமையால் நடந்தவற்றை அறிந்த ஜமதக்னி முனிவர் இதனால் கடும் கோபம் கொண்டார் அதன் பின்னர் ஜமதக்னி மகன்களை அழைத்து விவரம் சொன்னார். அவள் தலையை வெட்டித் தள்ளுங்கள் என்று கத்தினார் ஜமதக்னி. தந்தை சொன்னதைக் கேட்டு முதல் நான்கு மகன்களும் பின்வாங்கினார்கள் ஆனால் பரசுராமனோ தந்தை சொல்லைத் தட்டாத தனயனாக தன் கையில் இருந்த கோடரியால் அன்னை ரேணுகாதேவியை வெட்டினார். அவரைக் காப்பாற்ற ஊர் எல்லையில் இருந்த சேரியில் ஒரு பெண்மணி வர, அந்தப் பெண்ணையும் பரசுராமர் வெட்டினார்.

          என்னதான் தந்தை ஜமதக்னி முனிவர் சொன்னதைச் செய்தாலும் அம்மாவையே இப்படி கொன்றுவிட்டோமே என செயலுக்குப் பிறகு கலங்கினார் பரசுராமர் தந்தையிடம் முறையிட்டு மன்றாடினார். வெட்டிய தலையையும் உடலையும் பொருத்தினால் உயிர் பெற்று வருவாள் என வரம் அருளினார் ஜமதக்னி. உடனே ஊர் எல்லைக்கு வந்து அவசரத்தில் தாயின் தலையை மற்றொரு பெண்ணின் உடலோடும் அந்தப் பெண்ணின் தலையை தாயின் உடலோடும் பொருத்தி உயிர்கொடுத்துவிட்டார் பரசுராமர்.

          இதனால் ரேணுகாதேவியானவள் இனி ‘மாறுதலையைப்’ பெற்றதனால் ‘மாரி’ எனும் திருநாமத்துடனும் மற்ற பெண் ‘எல்லையம்மன்’ என்ற பெயருடனும் வாழ்வார்கள்; எல்லோருக்கும் அருள்பாலிப்பார்கள் என வாழ்த்தினார் ஜமதக்னி முனிவர்.

பச்சை வேப்பிலை மகத்துவம்

          ஜமதக்னி அவர் மனைவியான ரேணுகாதேவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர்.  கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரிடம் பகை கொண்டு அவரைக் கொன்று விட்டார்கள். கணவரை இழந்த ரேணுகாதேவி உயிர் வாழ விரும்பாமல் தீயில் இறங்கினாள். தெய்வமாகிய அவள் தீயில் இறங்கியது கண்டு, இந்திரன் வருண பகவானைக் கொண்டு மழை  பொழியச் செய்தான். தீ அணைந்தது. ஆனால், அதற்குள் ரேணுகாதேவியின் ஆடைகள் எல்லாம் எரிந்து, உடலில் தீக்கொப்புளங்கள் உண்டாயின. அவள் ஆடை இல்லாத நிலையில் காட்டிலிருந்த வேப்பிலையைப் பறித்து ஆடை போல் அணிந்து கொண்டாள். இவ்வாறு அம்மனுக்கு வேண்டிக்கொண்டு வேப்பிலை ஆடை அணியும் வழக்கம் உருவானது.

          இந்த ரேணுகா தேவி பெரியபாளையத்தில் தெய்வமாகக் கோயில் கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம். எனவே இங்கே பக்தர்கள் வேப்பிலை ஆடை தரித்து வேண்டுதல் செய்கிறார்கள். பரசுராமர் ரேணுகாதேவியின் புதல்வர் என்பதால் அவருக்கு ஒரு சன்னதி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe