
வேட்டி கட்டிய அக்மார்க் தமிழர் ட்ரூடோ சொன்னது உண்மையாகிப் போயுள்ளது. விழுந்து நொறுங்கி 176 பேரை காவு வாங்கிய உக்ரைன் விமானம் விபத்தினால் அவ்வாறு விழவில்லையாம். விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதுதான் உண்மையாம்!
ஏற்கெனவே கனடா பிரதமர் ட்ரூடோ இதைத்தான் சொன்னார். காரணம், இந்த விமான விபத்தில் இறந்த 176 பேரில் 63 பேர் கனடா குடிமக்ககள். எனவே கனடா பிரதமர் ட்ரூடோ இதனை வலியுறுத்திச் சொன்னார். இந்த விமானத்தை ஈரான் தான் சுட்டு வீழ்த்தியது. இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது என்றார்.

இதை தொடர்ந்து அமெரிக்காவும் அதனை ஒப்புக்கொண்டு, போர்ச்சூழலைப் பயன்படுத்தி, உக்ரைன் நாட்டு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது என்று கூறியது.
இந்நிலையில், உக்ரைன் பயணிகள் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
ஈராக்- பாக்தாத்தில் அமெரிக்க ராணுவ படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய போது தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் பாக்தாத்தில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் தற்போது தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகி கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தில் ஈரான் நாட்டினர் 82 பேர், கனடா நாட்டவர் 63 பேர் உள்பட, 176 பேர் பயணித்தனர்.

மனித தவறு காரணமாக உக்ரைன் பயணிகள் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் நாட்டு டிவி.,யில் செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொருங்கியதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஏவுகணை தாக்குதலால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், திட்டமிட்டு தங்கள் ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.