கோரோனாவை பரப்புனது அமெரிக்காதான் என்று சைனா திடீரென்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்க… அது சைனீஸ் வைரஸ் என்று பெயர்சூட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதுவித சர்ச்சையை கிளப்ப, டிவிட்டர் பக்கமே யுத்த களமாகியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் அதற்கு வெளிநாட்டு வைரஸ் என்று நாமகரணம் சூட்டியிருந்த அதிபர் டிரம்ப், தற்போது அந்த வெளிநாட்டின் பெயரையும் குறிப்பிட்டு, ‘சைனீஸ் வைரஸ்’ என்று தெரிவித்திருப்பது பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கோவிட் 19 எனப் பெயர் பெற்றுள்ள கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் இருந்துதான் உலகெங்கும் பரவியது. அமெரிக்காவில் தற்போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளுக்குச் சென்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட கொரோனா சோதனை செய்து கொண்டார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில், “சீன வைரஸால் ” பாதிக்கப்பட்டுள்ள ஏர்லைன்ஸ் மற்றும் பிற தொழில்களை கொண்ட நிறுவனங்களுக்கு அமெரிக்கா மிகவும் உறுதுணையான முறையில் ஆதரவு அளிக்கும். முன்பை விட நாம் பலமாக இருப்போம்! என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போட்டி நடைபெற்று வந்தது. ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில், வெளிப்படையாக, உலக மக்களைக் கொன்று குவிக்கும் கொரோனா வைரஸுக்கு சைனீஸ் வைரஸ் என்று டிரம்ப் நாமகரணம் சூட்டியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளபியுள்ளது.