
உலகை உலுக்கிய எய்ட்ஸ் போன்று… கொரோனா வைரஸும் நீண்ட காலம் இருக்கலாம் என்றும், ஒருபோதும் அழியாமலும் போகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, மனித உயிர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கி வருகிறது. இந்த மனிதப் பேரழிவை எதிர்கொள்ள வழி தெரியாமல், தொடர் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து, பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதனால், உலகம் முழுதுமே தொழில்கள் முடங்கி உலக பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. ஊரடங்கைத் தளர்த்தி பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தவும், இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் உலக நாடுகள் போராடி வருகின்றன.
இத்தகைய நடப்புகளைப் பார்த்துவிட்டு, கொரோனா வைரஸின் தாக்கம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே அறிஞர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட நிர்வாக இயக்குநர் மைக்ரயான் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், தடுப்பு மருந்து இன்றி, உலக மக்களுக்கு போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஆண்டுகள் பல ஆகலாம். ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டாலும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பெரும் முயற்சி தேவைப்படும். போதுமான அளவு உற்பத்தி செய்வதற்கும், அவற்றை உலக அளவில் விநியோகிப்பதற்கும் தீவிர முயற்சி தேவைப்படும்.

எனவே நீண்ட காலம் இந்த வைரஸ் நம்முடன் இருக்கக்கூடும். நம்மிடையே ஒவ்வோர் ஆண்டும் பரவி வரும் வைரஸ்களில் ஒன்றாகவும் கொரோனா வைரஸ் மாறக் கூடும். இது முற்றிலும் அழியக் கூடிய நிலையை அடையாமலும் இருக்கக் கூடும். எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரஸ் முற்றிலும் அழிக்கப்படவில்லை. ஆயினும் அந்த வைரஸை கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டறிந்து விட்டோம்.
அதுபோல், கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிப்பதையும் நம்ப முடியவில்லை. அதைக் கட்டுப் படுத்தும் வழிகளைக் கண்டறிந்து வாழவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படலாம்… என்று தெரிவித்துள்ளார்.