யோகா – மத சுதந்திரத்தை மீறவில்லை: அமெரிக்க நீதிமன்றம்

யோகா பயிற்சி மத சுதந்திரத்தை மீறவில்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்துவரும் மிகப் பழைமை வாய்ந்த இந்திய யோகக் கலை தற்போது அங்குள்ள பள்ளிகள் பலவற்றில் ஒரு பயிற்சிப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சுமார் 5,600 மாணவர்கள் படிக்கும் சாண்டியாகோ கவுண்டி என்சினிடாஸ் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வாரத்துக்கு 2 முறை 30 நிமிட யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் ‘யோகா பயிற்சி, இந்து மதம் மற்றும் புத்த மதக் கொள்கைகளை ஊக்குவித்து, கிறிஸ்துவ மதத்துக்கு தடையாக அமைந்துள்ளது’ என்று கூறி, ஸ்டீபன், ஜெனீபர் செட்லாக் மற்றும் அவர்களுடைய 2 குழந்தைகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை அந்த நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து கலிபோர்னியாவில் உள்ள 4வது மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அதுவும் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இது குறித்து நீதிமன்றம் தெரிவித்தபோது, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யோகா பயிற்சி தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்தபோது அதில் கலிபோர்னியா அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்த வகையிலும் மத சுதந்திரம் மீறவில்லை என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இந்தப் பள்ளியில் பாரம்பரிய உடற்பயிற்சிக்கு மாற்று போலத்தான் யோகா பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. சில வழிகளில் யோகா பயிற்சி மதத்துடன் தொடர்பு உடையதாக இருந்தாலும்கூட அமெரிக்கப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் யோகா பயிற்சி எந்த விதத்திலும் மதம், கடவுளைக் கண்டறியும் நம்பிக்கை மற்றும் ஆன்மிக சூழ்ச்சிமுறை போன்ற எதனையும் கொண்டிருக்கவில்லை என்று கூறியது