
ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் தனது ஜான்சனின் பேபி பவுடரை அமெரிக்காவிலும் கனடாவிலும் விற்பனை செய்வதை நிறுத்த உள்ளது.
ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடர் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தியதாகக் கூறி, நுகர்வோரிடமிருந்து பல ஆயிரம் வழக்குகளை எதிர் கொண்டிருக் கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் பில்லியன் கணக்கான டாலர்கள் நுகர்வோருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிறுவனம் தனது டால்க் பவுடர் தயாரிப்புகளின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.
ஜான்சன் அண்ட் ஜான்சன், அதன் அமெரிக்க சுகாதார நுகர்பொருள் வணிகத்தில் சுமார் 0.5% வரையான தயாரிப்புகளின் விற்பனையை எதிர்வரும் மாதங்களில் நிறுத்திவிடுவதாகக் கூறியுள்ளது! இருப்பினும், சில்லறை விற்பனையாளர்கள் தொடர்ந்து தங்கள் வசம் இருக்கும் சரக்குகளை விற்பனை செய்வார்களாம்.
இந்த நிறுவனத்தின் டால்க் தயாரிப்புகள் மூலம் வந்ததாக கூறப்பட்ட புற்றுநோய் ஏற்படுத்தும் அஸ்பெஸ்டோஸ் தொடர்பில், இந்த நிறுவனத்தைக் குற்றம் சாட்டி 16,000 க்கும் மேற்பட்ட நுகர்வோர் வழக்குகளை இது எதிர்கொண்டிருக்கிறது.
ஜான்சனின் பேபி பவுடருக்கான தேவை வட அமெரிக்காவில் குறைந்து வருவதாக நிறுவனம் கூறியுள்ளது! “நுகர்வோர் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் உற்பத்தியின் பாதுகாப்பைப் பற்றிய தவறான தகவல்களால் இவ்வாறு முடிவு எடுக்கத் தூண்டப்பட்டதாக அது கூறுகிறது. மேலும், தங்கள் நிறுவனம் மீது வழக்குகளைத் தொடர வாடிக்கையாளர்களுக்காக வக்கீல்கள் விளம்பரம் செய்து வந்ததையும் தாங்கள் எதிர்கொண்டதாக அது கூறியுள்ளது.
மேலும், “டால்க் பவுடன் அடிப்படையிலான ஜான்சனின் பேபி பவுடரின் பாதுகாப்பில் நாங்கள் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம். உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள் பல பத்தாண்டுகளாக அறிவியல் ஆய்வுகள் மூலம் எங்கள் தயாரிப்பின் பாதுகாப்பை ஆதரித்துள்ளனர்” என்று அது கூறியது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது பாதிக்கப் பட்டுள்ள அதன் நுகர்வோர் தயாரிப்புகளை மறு மதிப்பீடு செய்வதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த அக்டோபரில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த பவுடரில் ஆஸ்பெஸ்டோஸ் (கல்நார்) இல்லை என்று அது கூறியுள்ளது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் தங்களுக்கு ஓவரியன் கேன்சர் (சினைமுட்டை புற்றுநோய்) ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த 22 பெண்களுக்கு இழப்பீடாக 4.7 பில்லியன் டாலர் (3.6 பில்லியன் யூரோ) செலுத்த வேண்டும் என்ற 2018 ஆம் ஆண்டின் தீர்ப்புகளுக்கு எதிராக இந்த நிறுவனம் மேல்முறையீடு செய்திருக்கிறது.