
தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய யூனியன் தலைமை நீதிமன்றம் நீக்கியுள்ளதால், உலகெங்கிலும் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 28 நாடுகளைக் கொண்டது ஐரோப்பிய யூனியன். ஐரோப்பிய யூனியனுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் தலைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, 2001 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் தீவிரவாத இயக்கங்கள், பயங்கரவாத அமைப்புகள் குறித்த ஒரு பட்டியலை வெளியிட்டது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 13 தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் இருந்தன. மேலும், 22 அமைப்புகளின் பெயர்களும் இதில் இடம்பெற்றன. அதன் பின்னர், 2003ஆம் ஆண்டில் ஹாமஸ் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் சேர்க்கப்பட்டது.
இருப்பினும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் இந்தத் தடை விலக்கத்தால், ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கிப்பணமும் விடுவிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தத் தடை நீக்கத்தால், உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவு அரசியல் கட்சியினர் என பலரும் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.



