
கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா நமக்குக் கிடைத்த முக்கிய சொத்து என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்தார்.
உலகில் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாகவே மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசி மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. உலகிலேயே அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளதால், கொரோனா தடுப்பூசி உற்பத்தியிலும் இந்தியா முக்கிய பங்கு வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ், “இந்திய தனது தடுப்பூசிகளை அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்றது. உலக நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசி விநியோகிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித் திறன்தான் நமக்குக் கிடைத்துள்ள மிக முக்கிய சொத்து. உலகம் அதைப் புரிந்துகொண்டு, பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
தடுப்பூசிகள் அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பது குறித்துப் பேசிய அவர், தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் உற்பத்தி செய்ய ஏதுவாக லைசென்ஸ் வழங்கப்பட வேண்டும் என்றார். முன்னதாக, இந்தியா சுமார் 55 லட்சம் தடுப்பூசி டோஸ்களை தனது அண்டை நாடுகளுக்கு இலவசமாக அளித்திருந்து குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, ஓமான், கேரிகாம் நாடுகள், நிகரகுவா, பசிபிக் தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியா இலவசமாக தடுப்பூசி வழங்கவுள்ளதாக தெரிவித்தார். அதேபோல கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் ஆப்பிரிக்காவுக்கு 1 கோடி தடுப்பூசிகளையும், ஐநா சுகாதார ஊழியர்களுக்கு 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களையும் இந்தியா அளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல பிரேசில், மொரெக்கோ, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கும் வணிக ரீதியான தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.