
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் டாக்டர் முத்தூஸ் எலும்பு முறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த 26 ஆம் தேதி நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது 7 வயது மகள் ஹேமாவுடன் வருகை தந்துள்ளார்.
கடந்த 21 ஆம் தேதி மைசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுமி, விளையாடிக் கொண்டிருக்கும் போது கதவின் இடுக்கில் கை விரல் சிக்கியதாகவும், அந்த விரலில் வலி அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வலியை குறைப்பதாக சிகிச்சை அளிக்க சிறுமிக்கு ஊசி போட்ட நிலையில், சிறுமி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.
அதன் பின்னர் நாள் முழுவதும் சிறுமி அவசர சிகிச்சை பிரிவில் தனியாக வைக்கப்பட்ட நிலையில், பெற்றோரைக் கூட உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
பின்னர் மறுநாள் பெற்றோர் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்த பின்னர், சுயநினைவில்லாமல் இருந்த சிறுமியை பார்க்க அனுமதித்துள்ளனர். பின்னர் சிறுமி 27 ஆம் தேதி மாலை சுய நினைவு திரும்பாமலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக மகள் இறந்து விட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், ஏற்கனவே இதே மருத்துவமனையில் சரவணம்பட்டியில் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் கிளையில் சிறுமி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.