
சினிமா டைரக்டரை பெற்றோரே கொலை செய்து சூட்கேசில் அடைந்து வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாபக் ஹரோம்தின், ஈரான் தெஹ்ரான் நகரத்தில் வாழ்ந்து வந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள பல்கலை கழகம் ஒன்றில் சினிமா தொடர்பான பட்டப்படிப்பு முடித்து விட்டு இங்கிலாந்து நாட்டின் லண்டனில் மேற்படிப்பு முடித்துள்ளார்.
இதனையடுத்து, டைரக்டராக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற 47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இங்கிலாந்திலேயே தங்கி குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் டைரக்டராக பணியாற்றி வந்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த அவரது பெற்றோர், யாராவது ஒருபெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து தொலைபேசி மூலம் பாபக் ஹரோம்தினை வலியுறுத்தி வந்துள்ளனர்.
ஆனால், அவர் இதை கொஞ்சம் கூட பொருட்ப்படுத்தவில்லை. இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாபக் ஹரோம்தின் லண்டனில் இருந்து தனது சொந்த நாடான ஈரான் திரும்பி, தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், பாபக் ஹரோம்தின் சினிமா டைரக்ஷன் தொடர்பான ப்ரோடக்ஷன் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில், யாரேனும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் படி பாபக்யிடம் அவரது தந்தை கடந்த வாரம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அப்போது, தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பாப்க் ஹரோம்தின் தந்தை, பாப்க் ஹரோம் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
இதனால், அவர் மயக்கமடைந்துள்ளதை அடுத்து, பாப்க் ஹரோம்தின் தந்தை தனது மகனை கத்தியால் குத்தி கவுரவக்கொலை செய்து அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டியுள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு பாப்க் ஹரோம்தின் தாயாரும் உடந்தையாக இருந்து, துண்டுதுண்டாக வெட்டிய தனது மகனின் உடலை சூட்கேஸ் மற்றும் பைகளில் அடைத்து தெஹ்ரானின் அருகில் அமைந்துள்ள எக்படன் என்ற பகுதியில் வீசிச்சென்றுள்ளார்.
துர்நாற்றத்துடன் சூட்கேஸ் மற்றும் பையில் மனித உடல்பாகங்கள் கிடந்தது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கு புகார் அளித்தனர்.
அந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சூட்கேசில் இருந்தது பாப்க் ஹரோம்தினின் உடல் என்பதை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து பாப்க் ஹரோம்தின் தந்தை மற்றும் தாயார் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தனது மகனை கொன்றதை பாப்க் ஹரோம்தினின் தந்தையும், அதற்கு உடந்தையாக இருந்ததை அவரது தாயாரும் ஒப்புக்கொண்டனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.