ஐ.சி.சி. டி20 போட்டி – 08.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று இந்திய அணிக்கும் நமீபிய அணிக்குமிடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தால் அரையிறுதிப் போட்டியில் பங்குபெறும் அணிகளில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என்றாலும் இரு அணிகளும் உற்சாகத்துடன் விளையாடின.
விராட் கோலி இந்த ஆட்டத்திலும் பூவாதலையா வென்றார். முதலில் நமீபிய அணியை மட்டையாடச் சொன்னார். நமீபிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக ஆடினார்கள்; இருப்பினும் முதல் ஆறு ஓவர்களில் அவர்களால் 34 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதற்குள் இரண்டு விக்கட்டுகளையும் இழந்தனர். பிறகு ஜதேஜா, அஸ்வின், பும்ரா ஆகியோரின் பந்துவீச்சால் அந்த அணி இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தது. ஜதேஜா 4 ஓவர், 16 ரன், 3 விக்கட்; அஸ்வின் 4 ஓவர், 20 ரன், 3 விக்கட், பும்ரா 4 ஓவர், 19 ரன், 2 விக்கட் எடுத்தனர்.
பின்னர் ஆடவந்த இந்திய அணியின் ரோஹித் ஷர்மாவும் (37 பந்துகள் 56 ரன், 2 சிக்ஸ், 7 ஃபோர்) ராகுலும் (36 பந்துகள், 54 ரன், 2 சிக்ஸ், 4 ஃபோர்) மிகச் சிறப்பாக ஆடினர். ரோஹித் 9.5 ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்குப் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 25 ரன் அடித்தார். இதனால் இந்திய அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 136 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
நாளை ஆட்டம் இல்லை. 10ஆம் தேதி முதல் அரையிறுதி ஆட்டம்.