திருப்புகழ்க் கதைகள் 181
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கருவின் உருவாகி – பழநி
பரவைக்கு தூது சென்ற பரமன் 1
திருக்கைலாய மலையிலே தமது சத்தியாகிய உமா தேவியாரோடு எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானுடைய அடியார் கூட்டத்துள் ஒருவராகிய ஆலாலசுந்தரர் ஒருநாள் பூஜைக்காக புஷ்பங்களைக் கொய்வதற்குத் நந்தவனத்துக்குப் போனார். அங்கே பார்வதிதேவியாரின் சேடியர்களாகிய அனிந்திதை, கமலினி என்னும் பெயர்களையுடைய பெண்கள் இருவரையுக் கண்டு அவர்கள்மேல் ஆசைவைத்தார்.
அவர்களும் ஆலாலசுந்தரைக் கண்டு அவர்மேல் ஆசை கொண்டனர். அவர்கள் நந்தவனத்திலிருந்து மீண்டும் வந்ததும் கடவுளானவர் ஆலாலசுந்தரரை நோக்கி “நீ பெண்கள்மேல் இச்சைக்கொண்டபடியால், தக்ஷிணபூமியிலே மானுடதேகம் எடுத்துப் பிறந்து, அந்தப் பெண்களோடு புணர்ந்து இன்பம் அனுவிப்பாய்” என்று திருவாய்மலர்ந்தருளினார்.
அதைக்கேட்ட ஆலாலசுந்தரர் மனங்கலங்கி, சந்நிதானத்திலே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி, எழுந்து நின்று, அஞ்சலியஸ்தராகி, “எம்பெருமானே, தேவரீருடைய அருமைத் திருவடிகளைப் பிரிதற்கு ஏதுவாகிய கொடும் பாவத்தைச் செய்தவனாகிய சிறியேன் மயக்கம் பொருந்திய மனிதப் பிறப்பை எடுத்து, செய்யவேண்டியது இன்னது என்றும் நீக்க வேண்டியது இன்னது என்றும் அறியாது, பிரபஞ்ச வாழ்க்கையிலே மயங்கும் போது, தேவரீர் வெளிப்பட்டு வந்து அடியேனைத் தடுத்து ஆட்கொண்டருளவேண்டும்” என்று பிரார்த்திக்க; வேண்டுவார் வேண்டியவைகளை ஈந்தருளுங் கடவுளும் அவ்வேண்டுகோளுக்கு இசைந்தருளினார்.
பின்பு ஆலாலசுந்தரர், திருமுனைப்பாடி நாட்டிலே, திருநாவலூரென்னுந் திருப்பதியிலே, ஆதிசைவரென்னுஞ் சிவப்பிராமண குலத்திலே, சடையனாருக்கும், இசைஞானியார் என்பவருக்கும் திருவவதாரம் செய்தருளினார். அவருக்கு நம்பியாரூரர் என்று நாமகரணஞ் செய்தார்கள். திருமுனைப்பாடி நாட்டுக்கு அரசராகிய நரசிங்கமுனையரென்பவர் நம்பியாரூரரை அவரது அபிமானபுத்திரராகப் பாவித்து வளர்த்தார். அவர் பருவமெய்தியதும் அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தை, முதியவர் வடிவில் வந்து சிவபெருமான் தடுத்தாட்கொண்டார். பின்னர் திருவாரூரில் இருந்தபடி ஆலயங்கள் தோறும் சென்று திருமுறை திருப்பாட்டு பாடும் வரத்தை அளித்தார். தன்னுடைய தோழனாகவும் சுந்தரரை ஆக்கிக் கொண்டார். சுந்தரர் தினமும் திருவாரூர் ஆலயத்திற்குச் சென்று தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார்.
அப்படி ஒரு முறை செல்லும் போது பரவை நாச்சியாரை கண்டார். இவரே பார்வதி தேவியின் சேடியருள் ஒருவரான கமலினி என்பவர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முன்வினைப் பயனாக அவர்களுக்குள் காதல் புகுந்தது. இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு தொண்டாற்றியும் வந்தனர்.
இந்த நிலையில் பரவை நாச்சியார் திருவாரூரிலேயே தங்கிவிட, சுந்தரர் சிவாலய தரிசனத்திற்காக யாத்திரை மேற்கொண்டார். பல சிவாலயங்கள் சென்று ஈசனைப் பணிந்து பாடி, தான் வேண்டியவற்றையும், தன் அன்பர்கள் வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார் சுந்தரர். தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் ஈசனை வழிபடுவதற்காக வந்தார். அங்கு சங்கிலி நாச்சியார், ஈசனுக்கு பூ கட்டி, தொண்டாற்றிக் கொண்டிருந்தார்.
சுந்தரர் திருவொற்றியூர் ஆலய தரிசனத்திற்காக வந்த போது, சங்கிலியிடம் காதல் வயப்பட்டார். இந்த சங்கிலி நாச்சியார் பார்வதி தேவியாரின் மற்றொரு சேடிப்பெண்ணான அனிந்திதை ஆவார். சுந்தமூர்த்தி சுவாமிகள், தொடர்ந்து ஈசனிடம் சென்று, சங்கிலியிடம் தனக்காக சென்று பேசி, தனக்கும் சங்கிலிக்கும் மணம் செய்து வைக்கும்படி வேண்டினார்.
ஈசனும் அதற்கு ஒப்புக்கொண்டு சங்கிலி நாச்சியாரிடம் சென்று, சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். உடனே சங்கிலியார், “சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணம் செய்து கொண்டிருக்கிறார். எனவே நான் எப்படி அவரை மணக்க முடியும்?” என்று ஈசனிடம் கேட்டார்.
அதற்கு ஈசன், அவளை விட்டு சுந்தரர் பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித் தருவதாக கூறினார். இதையடுத்து சுந்தரரை மணக்க சங்கிலி நாச்சியார் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவொற்றியூரிலேயே தங்கியிருந்து சிவதொண்டு செய்து வந்தனர். சில காலம் சென்றது. அதன் பின்னர் என்னவானது? நாளை காணலாம்.