2015 ஆம் வருடம் சென்னை நகரை மூழ்கடித்த பெரு மழையைப் போல தற்போதும் கனமழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது மேலும் நவம்பர் 10 நாளை மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னை வாசிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 24 மணி நேரத்தில் 21செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை நகரின் தெற்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகளவு இல்லை. சென்னையின் மத்திய மற்றும் வடக்கு புறநகர் பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தி்ல் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், தற்போது மழை குறைந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் வெள்ளம் வடிந்து வருகிறது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக மழைபெய்வதற்கு உயர் காற்றழுத்த சுழற்சி மண்டலம் காரணமாக இருந்தது. இது தற்போது தெற்கே நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் சில இடங்களில் சில நேரங்களில் மிகக் கனமழை பெய்யும். பாண்டிச்சேரிக்கு தெற்கே இன்று கனமழை பெய்யக்கூடும். எனினும் காலை நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.
இதனிடையே, தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட 17 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் நான்கு நாட்களுக்கு இடைவிடாமல் மழை பெய்யும் என்பதால், சென்னை உள்ளிட்டபல மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்தும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மதுரை விழுப்புரம் மயிலாடுதுறை திருநெல்வேலி தென்காசி சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகபட்டிணம் ராமநாதபுரம் விருதுநகர் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது