திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர்… ஶ்ரீ ராமானுஜர் காலத்தில் பல முதலிகள் ( ஞானாசிரியர்கள்) இருந்தனர். அவர்களில் ஒருவர் திருக்கோவலூர் ஆழ்வான். இவர் எம்பெருமானார் ஏற்படுத்திய 74 சிம்மாதிபதிகளில் ஒருவர். 9வது சிம்மாதிபதியாக இருந்தவர். திருக்கோவிலூர் சென்று ஆயனுக்குக் கைங்கர்யம் செய்து வந்தார். பிறகு நேர்ந்த படையெடுப்பில் திருக்கோவிலூர் ஆயன் கோவில் , தெருக்கள் அழிக்கப்பட்டன. அதற்குப் பிறகு திருவரங்கத்திலிருந்து வேத வ்யாஸ பட்டர் எழுந்தருளி கோயிலை புணரமைத்து, நிர்வாகம் செய்து வந்தார்.
மீண்டும் சனாதன தர்மத்தின் அடுத்த பிரிவின் மூலம் ஆக்ரமிப்பு செய்யப்பட்டு முற்றிலுமாக மாற்றப்பட்ட சமயத்தில் ஶ்ரீ வேத வ்யாஸ பட்டர் கனவில் ஆயன் தோன்றி ஜீயர் அவதரித்து உத்தாரணம் செய்வார் என்று சொல்லி மறைந்தான்.
பட்டரும் ஜீயர் வருகையை எதிர்பார்த்து திருவரங்கம் எழுந்தருளி, அரங்கநகர் அப்பனுக்கு கைங்கர்யம் செய்து வந்தார்.
திருப்பதி அருகில் ஒரு கிராமத்க கொண்டன் அய்யங்கார் என்ற கிருஷ்ண அய்யங்கார், மாதவம்மங்கார் அவர்களுக்கு இராமானுஜன் என்ற மகான் கிபி 1452 ஆண்டு அவதாரம்.
இராமானுஜன் சிங்காரச்சாரி அய்ங்காரிடம் பாடம் பயின்ற காலத்தில், ஆதிசேக்ஷன் குடையாக நின்று கைங்கர்யம் செய்ததைப் பார்த்து , அதிசயித்து அவருக்கு லக்ஷ்மணாரியர் என்ற திருநாமம் சூட்டினர். திருமலைக்கு சென்று திருவேங்கடமுடையான் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வந்தார்.
அந்த சமயத்தில் திருப்பதி பெரிய கேள்வியப்பன் பரமபதிக்க, திருவேங்கடமுடையான் உத்தரவின் பெயரில் அவனுடைய கைங்கர்யத்தை இராமானுஜன் ஏற்றுக் கொள்ள , அன்று முதல் திருமலை கேள்வி ஜீயர் என்று அழைக்கப்பட்டார்.
சந்திரகிரி மன்னன் வேங்கடபதி , ஸ்வாமியின் பிரபாவத்தை கேள்விப்பட்டு , அவரை சரணமடைந்தான். மன்னன் அழிவுற்ற சோழநாட்டு திருக்கோவிலை புணரமைப்பு செய்யுமாறு ஸ்வாமியிடம் வேண்டி நின்றார். பதினேழு ஆண்டு திருமலை ஜீயர் கைங்கர்யம் செய்தபின், இந்த பணிக்காக சந்தனரதம் ஏறி திருக்கோவிலூர் வந்தார்.
சந்திரகிரி மன்னன் சிபாரிசில் , செஞ்சி மன்னன் துவால் கிருஷ்ணப்ப நாயக்கர் துணைக்கொண்டு கோவிலை மீட்டு ஆயனை எழுந்தருளப் செய்து , மடம் நிறுவி எம்பெருமானார் தர்சனத்தை நிர்வாகித்து வந்தார். ஆயன் அவரை எம்பெருமானரே வாரீர் என்று உகந்தான். அன்றுமுதல் ஜீயர் , எம்பெருமானார் ஜீயர் என்று அழைக்கப்பட்டார்.
ஶ்ரீ முஷ்ணம் மற்றும் திருக்கண்ணமங்கை கோயில்களையும் புணரமைத்து, எம்பெருமானார் தர்சனத்தை நிறுவி, நிர்வாகம் செய்து வந்தார்.
நவதிருப்பதி எழுந்தருளி ஆழ்வார்திருநகரி மற்றும் மற்ற திருப்பதிகளை போத்தி நிர்வாகத்திலிருந்து மீட்டு, புணரமைத்து, எம்பெருமானார் தர்சனத்தை ஏற்படுத்தினார். அன்று முதல் நவதிருப்பதி ஜீயர் என்றும் அழைக்கப்பட்டார்.
அந்தப் பகுதிக்கு அதிபதியாக இருந்த வீரவேங்கட தேவராயன் ஜீயரை ஆதரித்து வைணவணாக மாறி , நவதிருப்பதி கோவிலில்களில் ஸ்வாமிக்கு முதல் தீர்த்தம் கொடுத்தருளினான் என்று எம்பெருமானார் ஜீயர் வரலாறு கூறுகிறது. ஸ்வாமி 14 வருட காலம் ஶ்ரீ வைகுண்டத்தில் மடம் நிறுவி, நவதிருப்பதிகளை நிர்வாகித்து வந்தார்.
திருவரங்கம் சென்று ஶ்ரீ வேத வ்யாஸ பட்டரை சந்தித்து, கூரத்தாழ்வான் திருமாளிகையை செப்பனிட்டு , பட்டர் கைங்கர்யங்களை திருவரங்கத்தில் ஏற்படுத்தி, திருவரங்க திருநாராயண ஜீயர் நன்மதிப்பைப் பெற்று, திருக்கோவலூர் எழுந்தருளி , திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் என்று நிர்வாகம் செய்து வந்தார்.
அவருக்குப் பிறகு திருமலை நம்பி என்பவருக்கு தண்டம் காக்ஷயம் கொடுத்து ஜீயர் நியமனம் செய்து , மடம் ஆயன் நிர்வாகத்தை செலுத்தி வந்தனர்.
12 பட்டம் வரை தண்டம் காக்ஷாயத்துடன் எழுந்தருளியிருக்கிறார் , அதன்பிறகு கிரஹாஸ்ரம தர்மத்திலிருந்து ஜீயர் மடத்தை நிர்வகித்து வருகின்றனர்.
இந்த குருபரம்பரையில் வந்த 25 வது பட்டம் திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் இன்று காலை 2.30 மணியளவில் ஆசார்யன் திருவடி அடைந்தார். நித்ய விபூதி கைங்கர்யத்துக்கு எழுந்தருளினார்.
குறிப்பு : திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் வைபவம் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாரம்.
திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
- மகர சடகோபன், தென்திருப்பேரை