உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பத்தாம் நாள் – 25.10.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று உலகக் கோப்பை டி20 போட்டியில் குரூப் 1 பிரிவில் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது.
இலங்கை அணி (157/6, நிசாங்கா 40, அசலங்கா 38*, தனஞ்சயா 26, கருணரத்னே 14*) ஆஸ்திரேலிய அணியிடம் (16.3 ஓவரில் 158/3, ஸ்டொய்னிஸ் 59*, ஆரோன் ஃபிஞ்ச் 31*) ஏழு விக்கட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர் குஷால் மெண்டிஸ் (5 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர், நிசாங்காவுடன் (45 பந்துகளில் 40 ரன்) இணைந்து தனஞ்சயா (23 பந்துகளில் 26 ரன்), அசலங்கா (25 பந்துகளில் 38 ரன்) நன்றாக ஆடினர். ஆனால் அதன் பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று விக்கட்டுகளை இழந்தது.
இறுதியில் அந்த அணி 20 ஓவருக்கு ஆறு விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது. அதன் பின்னர் ஆட வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் சுமாராக இருந்தது. முதல் ஆட்டத்தில் நியுசிலாந்து அணியிடம் மிக மோசமாக தோற்றிருந்ததால் ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்தில் வெற்றியும் பெற்றாக வேண்டும், நல்ல நெட் ரன்ரேட்டும் எடுக்க வேண்டும்.
அவர்களின் அந்த விருப்பத்தை பூர்த்தி செய்ய மார்க் ஸ்டோய்னிஸ் வந்தார். 18 பந்துகளில் 59 ரன் அடித்து 16.3 ஓவர்களில் அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார். இது ஒரு ஆஸ்திரேலிய வீரரின் மிக வேகமான அரை சதமாகும்.
இதில் ஆறு சிக்சர்கள், 4 ஃபோர்கள் அவர் அடித்தார். இவ்வாறாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
நாளை மெல்போர்னில், குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து அயர்லாந்து ஆடும் ஆட்டமும், ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகள் ஆடும் ஆட்டமும் நடைபெறும்.